(ப-ரை.) பெண்ணை - மனையாளை, வைத்து - (வீட்டில் துன்பமுற) வைத்து, வாழாமல் - (அவளோடு கூடி) வாழாமல், திரியவேண்டாம் - அலையாதே. மனையாளை - பெண்டாட்டியின் மீது, குற்றம் ஒன்றும் - குற்றமான சொல் யாதொன்றும், சொல்லவேண்டாம் - சொல்லாதே. வீழாத - விழத்தகாத, படுகுழியில் - பெரும் பள்ளத்தில், வீழ வேண்டாம் - வீழ்ந்துவிடாதே. வெஞ்சமரில் - கொடிய போரில், புறங்கொடுத்து - முதுகு காட்டி, மீள வேண்டாம் - திரும்பிவாராதே. தாழ்வான - தாழ்வாகிய, குலத்துடன்-குலத்தினருடன், சேர வேண்டாம் - கூடாது. தாழ்ந்தவரை - தாழ்வுற்றவர்களை, பொல்லாங்கு - தீங்கு, சொல்ல வேண்டாம் - சொல்லாதே. வாழ்வு ஆரும் - செல்வம் நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்ளி- வள்ளி நாச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே , வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொ-ரை.) மனையாளோடு கூடி வாழாமல் அலைதல் கூடாது. திரிதல்- வேசையர் முதலியோரை விரும்பி அலைதல். இனி, பெற்ற பெண்ணைக் கணவனுடன் வாழாமல் தன் வீட்டில் வைத்து மாறுபட வேண்டாம் என்பதும் ஆம். மனைவியைப்பற்றி எவ்வகைக் குற்றமும் அயலாரிடத்துச் சொல்லுதல் கூடாது. மனைவிக்குள்ளது தனக்கும் உள்ளதாம் ஆகலானும், கேட்ட அயலார் ஒரு காலத்துப் பழிக்கக்கூடும் ஆகலானும் சொல்ல வேண்டாம் என்றார். கற்புடைய மனைவிமீது குற்றம் சுமத்துவது பாவம் என்பதுமாம். விழத்தகாத படுகுழியில் விழுதல் ஆகாது. படுகுழி என்பது கொடுந்துன்பத்திற்கு ஏதுவாகிய தீயசெய்கையைக் குறிக்கின்றது. மீளாத துன்பத்தை யுண்டாக்கும் தீச்செய்கையைச் செய்யலாகாது என்க. போரில் அச்சத்தால் முதுகுகாட்டி ஓடுதல்கூடாது, ஆண்மையுடன் எதிர்த்து நின்று போர்புரிய வேண்டுமென்க. புறம் - முதுகு. சமர் - போர், யுத்தம். தாழ்ந்த குலத்தாருடன் சேர்தல் கூடாது. குலம், அதனை உடையார்க்கு ஆகுபெயர். தாழ்ந்த குலத்தார் - இழிதொழில் செய்யும் குடியிற் பிறந்தவர். சேர்தல் - நட்புக்கொள்ளுதலும் சம்பந்தஞ் செய்துகொள்ளுதலும். உயர்ந்தநிலையிலிருந்து தாழ்வெய்தியவர்களைத் தீமையாகப் பேசுதல்கூடாது. தாழ்ந்தவர் என்பதற்குக் கீழோர் என்றும், வணங்கினவர் என்றும் பொருள் கூறுதலும் பொருந்தும். (5) |