(ப-ரை.) வார்த்தை சொல்வார்- (பயனில்) சொற்கள் கூறுவாருடைய, வாய் பார்த்து - வாயைப் பார்த்துக் கொண்டு, திரியவேண்டாம் - அவரோடு கூட அலையாதே. மதியாதார் - நன்கு மதிக்காதவருடைய, தலைவாசல் - கடை வாயிலில், மிதிக்க வேண்டாம்- அடியெடுத்து வைக்காதே. மூத்தோர் - தாய், தந்தை, தமையன், ஆசான் முதலியவர்களும், அறிவிற்பெரியோர்களும் ஆவர். முன்கோபக்காரரோடு - முன்கோபமுடையாருடனே, இணங்க வேண்டாம் - சேராதே. வாத்தியார்- (கல்வி கற்பித்த) ஆசிரியருடைய, கூலியை - சம்பளத்தை, வைத்திருக்க வேண்டாம் - (கொடுக்காமல்) வைத்துக்கொள்ளாதே. வழி பறித்து - வழிப்பறி செய்து, திரிவாரோடு- திரிந்து கொண்டிருப்பவருடன், இணங்கவேண்டாம் - சேராதே. சேர்த்த - ஈட்டிய, புகழாளன் - புகழுடையவனாகிய, ஒரு - ஒப்பற்ற, வள்ளி பங்கன்-வள்ளியம்மையாரைப் பக்கத்தில் உடையவனாகிய, திருகை - அழகிய கையின்கண், வேலாயுதனை-வேற்படையையுடைய முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, செப்பாய் - புகழ்வாயாக. (பொ-ரை.) வீண் பேச்சுப் பேசுவார் சொற்களைக் கேட்டுக்கொண்டு அவர்பின் அலைதல் கூடாது. வாய், சொல்லுக்கு ஆகுபெயர். வாய்பார்த்தல் என்றது "பண்கண்டளவில்" என்பதுபோல நின்றது. மதியாதாருடைய வீட்டிற்குச் செல்லுதல் கூடாது. மதியாதார் - அவமதிப்பவர். மிதித்தல்- அடியெடுத்து வைத்தல், சேர்தல். பெரியோர் கூறியனவற்றை மறத்தல் கூடாது; பெரியோர் சொன்னபடி நடக்க வேண்டும் என்க. மூத்தோர் - தாய், தந்தை, தமையன், ஆசான் முதலியவர்களும், அறிவிற் பெரியோர்களும் ஆவர். மிக்க கோபமுடையாருடன் நட்புக்கொள்ளுதல் கூடாது. முன்கோபம் - பொறுமையின்றி முதலெடுப்பில் உண்டாகும் சினம். கோபக்காரருடன் சேரவேண்டாம் என்றதனால் கோபம் கூடாது என்பதும் ஆயிற்று. கல்வி கற்பித்த ஆசிரியன் காணிக்கையைக் கொடாமல் இருத்தல் கூடாது. உபாத்தியாயர் என்பது வாத்தியார் எனத் திரிந்தது. வழிப்பறி செய்யும் கள்வருடன் சேர்தல் கூடாது. வழிப்பறி செய்தல்-வழியிற் பயணம் போகிறவர்களின் பொருளைப் பறித்துக்கொள்ளுதல். சேர்த்த - சம்பாதித்த; சேர்த்த என்பது வலித்தல் விகாரமாயிற்று என்னலுமாம். (6) |