(ப-ரை.) கருமங்கள்-(செய்யத்தக்க) காரியங்களை, கருதாமல் - (செய்யும்வழியை ) எண்ணாமல், முடிக்க வேண்டாம் - முடிக்க முயலாதே. அழிவு கணக்கை - பொய்க்கணக்கை, ஒருநாளும்- ஒருபொழுதும், பேச வேண்டாம் - பேசாதே. பொருவார் - போர் செய்வாருடைய, போர்க்களத்தில்- போர்(நடக்கும்) இடத்தின்கண், போக வேண்டாம் - போகாதே. பொது நிலத்தில்- பொதுவாகிய இடத்தில், ஒருநாளும் - ஒரு பொழுதும், இருக்க வேண்டாம் - (குடி) இராதே. இருதாரம் - இரு மனைவியரை, ஒருநாளும் - ஒருபொழுதும், தேடவேண்டாம் - தேடிக் கொள்ளாதே. எளியாரை - ஏழைகளை, எதிரிட்டுக் கொள்ளவேண்டாம் - பகைத்துக் கொள்ளாதே. குருகு - பறவைகள், ஆரும் - நிறைந்த, புனம் - தினைப்புனத்தை, காக்கும் - காத்த, ஏழை - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, குமரவேள் - குமரவேளின், பாதத்தை- திருவடியை, நெஞ்சே - மனமே, கூறாய் - புகழ்வாய். (பொ-ரை.) செய்யப்படும் காரியங்களை முடிக்கும் வழியை ஆராய்ந்து செய்தல் வேண்டும். ஒரு காரியத்தை அதனால் வரும் நன்மை தீமைகளை ஆராயாமற் செய்தல் கூடாது என்பதும் ஆகும். பொய்க்கணக்குக் கூறுதல் கூடாது. வேற்றுமை உருபைப் பிரித்துக் கூட்டுக. பொய்நிலை பெறாதாகலின் அஃது அழிவு என்று சொல்லப்பட்டது. பிறர் போர் செய்யும் இடத்தில் குறுக்கே செல்லலாகாது. வீணாகப் போரிலே கலந்து கொள்ளக்கூடாது என்றுமாம். தம் : சாரியை. பலர்க்கும் உரிய பொது நிலத்தில் குடியிருத்தல் கூடாது. பொது நிலம்-மந்தை, சாவடி முதலியன. பொதுவிடத்தில் பலரும் வருவார்களாகையால் அங்கே குடியிருப்பின் துன்பமுண்டாகும் என்க. இரண்டு மனைவியரை மணந்து கொள்ளல் கூடாது. இரு மனைவியரைக் கொண்டால் பெரும்பாலும் அவர்களுக்குள் போராட்டமுண்டாகுமாதலின் தனக்குத் துன்பமேயன்றி இன்பம் இராதென்க. தாரம் - மனைவி. ஏழைகளிடத்துப் பகைத்தல் கூடாது. எளியார்- இடம் பொருள் ஏவல் இல்லார், எதிர்-பகை. மறுமையில் நரகத்திற் கேதுவாகலின் எதிரிட்டுக் கொள்ளவேண்டாம் என்றார். காத்த என்பதைக் காக்கும் என்றது காலவழுவமைதி, ஏழை - பெண், குமரவேள் - குமரனாகிய வேள்; குமரன் - இளைஞன்; முருகன். (7) |