8.சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
    செய்தநன்றி யொருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடுங் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
    உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
    பிணைப்பட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) சேராத இடந்தனில் - சேரத்தகாத இடங்களில், சேரவேண்டாம் - சேராதே.

செய்தநன்றி - ஒருவன் செய்த உதவியை, ஒருநாளும் - ஒருபொழுதும் மறக்க வேண்டாம் - மறக்காதே.

ஊரோடும் - ஊர்தோறும் ஓடுகின்ற, குண்டுணியாய் - கோட் சொல்பவனாகி, திரிய வேண்டாம் - அலையாதே.

உற்றாரை - உறவினரிடத்து, உதாசினங்கள் - இகழ்ச்சியுரைகள், சொல்ல வேண்டாம் - சொல்லாதே.

பேர்ஆன - புகழ் அடைதற்குக் காரணமாகிய, காரியத்தை - காரியத்தை, தவிர்க்க வேண்டாம்- (செய்யாது) விலக்க வேண்டாம்.

பிணைபட்டு - (ஒருவனுக்குப்) பிணையாகி, துணைபோகி - துணையாகச் சென்று, திரியவேண்டாம்-அலையாதே.

வார்ஆரும் - பெருமை நிறைந்த, குறவர்உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) சேர்தற்குத் தகுதியில்லாதவருடன் சேர்தல் கூடாது.

தகாதவர் - கள்ளுண்போர், தூர்த்தர் முதலாயினார், தன்: சாரியை.

ஒருவர் செய்யும் உபகாரத்தை எப்பொழுதும் மறத்தல் கூடாது.

நன்றி மறப்பது தீராக் குற்றமாகும்;

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

என்பது திருக்குறள்.

"நன்றி மறவேல்"

என்றார் ஒளவையாரும்.

ஊர்தோறும் சென்று புறங்கூறுதல் கூடாது.

ஓடும் என்னும் பெயரெச்சம் குண்டுணி என்னும் பெயருடன் முடிந்தது. குண்டுணி-கோட் சொல்வோன் என்னும் பொருளில் வழங்குகிறது. ஊரோடும் என்பதற்கு ஊரிலுள்ள தீயவர்களுடன் சேர்ந்து என்று பொருளுரைத்தலும் ஆம்.

உறவின் முறையாரை மதியாது இகழ்தல் கூடாது.

புகழைத் தருதற்குரிய வினையைச் செய்யாதிருத்தல் கூடாது.

பேர், பெயர் என்பதன் மரூஉ ; பெயர் - புகழ்.

ஒருவனுக்குப் பிணையாகித் திரிந்துகொண்டிருத்தல் கூடாது.

கடன் வாங்குவோர்க்கும் குற்றஞ் செய்வோர்க்கும் பிணையாதல் துன்பத்தை யுண்டாக்கும்.

பிணை - புணை ; ஈடு - ஜாமீன்.

வார் - விலங்கு, பறவை முதலிய பிடித்தற்குரிய வலையும் ஆம். (8)