9.மண்ணின்று மண்ணோரஞ் சொல்ல வேண்டாம்
    மனஞ்சலித்துச் சிலுக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
    காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம்
    புறஞ்சொல்லித் திரிவாரோ டிணங்க வேண்டாம்
மண்ணளந்தான் தங்கையுமை மைந்தன் எங்கோன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) மண்ணில் நின்று - நிலத்தில் நின்று, மண்-மண்ணைப்பற்றி, ஓரம் - ஒருதலைச் சார்பாக, சொல்ல வேண்டாம் - பேசாதே.

மனம் - உள்ளம், சலித்து - இளைத்து, சிலுகிட்டு - (யார் மாட்டும்) சண்டையிட்டு, திரிய வேண்டாம் - அலையாதே.

கண் - அருளை, அழிவு செய்து- அழித்து, துயர் காட்ட வேண்டாம் - (பிற உயிர்கட்குத்) துன்பஞ் செய்யாதே.

காணாத-காணாதவற்றைப் பற்றி, கட்டுவார்த்தையை- கட்டுவார்த்தைகளை, உரைக்க வேண்டாம் - சொல்லாதே.

புண்பட - (கேட்போர் மனம்) புண்படுமாறு, வார்த்தைதனை - சொற்களை, சொல்ல வேண்டாம்-சொல்லாதே.

புறம் சொல்லி - புறங்கூறி, திரிவாரோடு - அலைபவருடன், இணங்க வேண்டாம் - சேராதே.

மண் அளந்தான் - நிலத்தை (மூவடியால்) அளந்த திருமாலுக்கு, தங்கை - தங்கையாகிய, உமை - உமாதேவிக்கு ; மைந்தன்-மகனும், எம்கோன் - எமக்குத் தலைவனும் ஆகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) நிலத்தின்மீது நின்று நிலத்தைப்பற்றிய வழக்கில் ஓரஞ் சொல்லுதல் கூடாது.

"ஓரஞ்சொல்லேல்" என்பது ஆத்திசூடி.

ஓரம்- நடுநிலையின்மை, பட்சபாதம்.

மனத்திட்ப மில்லாது கோபத்தால் யாருடனும் சண்டையிடுதல் கூடாது.

அருளின்றிப் பிற உயிர்களை வருத்துதல் கூடாது.

கண், கண்ணோட்டத்திற்கு ஆகுபெயர். ஈண்டு அருளைக் குறித்து நின்றது. இனி, கண்ணீர் ஒழுகுமாறு தனக்குள்ள துயரைப் பிறரிடத்துப் புலப்படுத்தல் வேண்டா என்பதும் ஆம். கண்ணழிவு என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு தடுத்து என்றும், பிரித்து என்றும் பொருள் சொல்லலுமாம்.

பிறர் செய்யும் நற்காரியத்தைத் தடுத்துஎன்றும், சேர்ந்திருப் போரைப் பிரித்து என்றும் கொள்ளவேண்டும்.

காணாதவற்றைக் கண்டதுபோல வைத்துப் பொய் கூறல் கூடாது.

கட்டு வார்த்தையை என மாற்றப்பட்டது. கட்டுவார்த்தை - கற்பனை வார்த்தை.

இனி, வார்த்தை என்பதற்குச் செய்தி என்று பொருள் கூறி, காணாத செய்தியைக் கண்டதுபோல உறுதியாகப் பேச வேண்டாம் என்று உரைத்தலுமாகும். கட்டுரைத்தல்- உறுதியாகப்பேசுதல்.

கேட்போர் மனம் வருந்துமாறு கொடுஞ்சொற் கூறலாகாது.

புண்படல் - புண்பட்டாற்போல் வருந்தல்.

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு"

என்பது திருக்குறள்.

புறங்கூறுவாருடன் சேர்தல் கூடாது.

புறஞ்சொல்லல் இன்னதென்பது முன்பு உரைக்கப்பட்டது. (9)