1-5
 
1.ஓதாம லொருநாளும் இருக்க *வேண்டாம்
    ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
    வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
    போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) ஓதாமல் - (நூல்களை) கற்காமல், ஒருநாளும்-ஒருபொழுதும், இருக்கவேண்டாம்- (நீ) வாளா இராதே.

ஒருவரையும்- யார் ஒருவர்க்கும், பொல்லாங்கு -தீமை பயக்கும் சொற்களை, சொல்ல வேண்டாம்- சொல்லாதே.

மாதாவை - (பெற்ற) தாயை, ஒருநாளும் - ஒருபொழுதும், மறக்க வேண்டாம் - மறவாதே.

வஞ்சனைகள் - வஞ்சகச் செயல்களை, செய்வாரோடு - செய்யுங் கயவர்களுடன், இணங்க வேண்டாம்- சேராதே.

போகாத - செல்லத்தகாத, இடந்தனிலே - இடத்திலே, போகவேண்டாம் - செல்லாதே.

போகவிட்டு - (ஒருவர்) தன்முன்னின்றும் போன பின்னர், புறம் சொல்லி - புறங்கூறி, திரியவேண்டாம்-அலையாதே.

வாகு- தோள்வலி, ஆரும் - நிறைந்த, குறவருடை -குறவருடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் -வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) எக்காலத்திலும் இடைவிடாது கல்வி கற்கவேண்டும்.

எவரையும் தீய சொற்களால் வையாதே. பகைவராயினும் என்பதற்கு ஒருவரையும் என்றார். பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்றமையால், நன்மைபயக்கும் சொற்களே சொல்ல வேண்டும் என்பதாயிற்று.

பெற்ற தாயை எக்காலத்தும் நினைந்து போற்றுதல் வேண்டும்.

வஞ்சகச் செயல்களைச் செய்பவர்களுடன் நட்புக்கொள்ளுதல் கூடாது. வஞ்சனை - கபடம்.

செல்லத்தகாத தீயோரிடத்தில் ஒன்றை விரும்பிச் செல்லாதே, தகுதியில்லாரிடத்தில் எவ்வகைச் சம்பந்தமும் கூடாது.

ஒருவரைக் கண்டபோது புகழ்ந்து பேசிக் காணாத விடத்தில் இகழ்ந்து பேசுதல் கூடாது. புறஞ் சொல்லல் - புறங்கூறல்; காணாவிடத்தே ஒருவரை இகழ்ந்துரைத்தல்.

குறவர் மகளாகிய வள்ளியம்மையின் கணவனாகிய முருகக் கடவுளை நெஞ்சே நீ வாழ்த்துவாயாக.

வாகு: ஆகுபெயர்; மான் வயிற்றிற்பிறந்து குறவர் தலைவனால் வளர்க்கப்பெற்றமையானும் குறவரெல்லாராலும் அன்பு பாராட்டப் பெற்றமையானும் 'குறவருடை வள்ளி' என்றார்.

உடைய என்னும் பெயரெச்சம் குறைந்து நின்றது. பெருமான் என்பது பெருமாள் எனத் திரிந்து நின்றது. வாழ்த்தாய்; முன்னிலையேவலொருமை வினைமுற்று.

நெஞ்சே என்றது விளி; இதனை 'இருக்க வேண்டாம்' என்பது முதலிய ஒவ்வொன்றோடும் கூட்டுக; பின்வரும் பாட்டுகளிலும் இங்ஙனமே கூட்டிக்கொள்க. 

___________________________________

*`வேண்டாம்'- என்னும் இச்சொல், `வேண்டா' என்றிருத்தல்வேண்டுமெனப் பெரும் புலவர் சிலரால் கருதப்படுகின்றது.

   
2.நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
    நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
    நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
    அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) நெஞ்சு ஆர - மனம் பொருந்த, பொய்தன்னை - பொய்யை, சொல்லவேண்டாம் - சொல்லாதே.

நிலை இல்லா - நிலைபெறாத, காரியத்தை - காரியத்தை, நிறுத்த வேண்டாம் - நிலைநாட்டாதே.

நஞ்சுடனே - விடத்தையுடையபாம்புடனே, ஒருநாளும் - ஒரு பொழுதும், பழக வேண்டாம்- சேர்ந்து பழகாதே.

நல்இணக்கம் - நல்லவர்களுடையநட்பு, இல்லாரோடு - இல்லாதவர்களுடன், இணங்கவேண்டாம்- நட்புக்கொள்ளாதே.

அஞ்சாமல்- பயப்படாமல், தனி-தன்னந்தனியாக,வழி போகவேண்டாம் - வழிச்செல்லாதே.

அடுத்தவரை - தன்னிடத்து வந்துஅடைந்தவரை, ஒரு நாளும் - ஒரு பொழுதும், கெடுக்கவேண்டாம்- கெடுக்காதே.

மஞ்சு ஆரும்- வலிமை நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்ளி-வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்- பக்கத்தில், உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே; வாழ்த்தாய்- (நீ)வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) மனமறியப் பொய் கூறுதல் கூடாது.

"தன்னெஞ் சறிவது பொய்யற்க" என்றார் திருவள்ளுவர். பொய்தன்னை என்பதில், தன்:சாரியை.

உறுதியில்லாததை நிலைநிறுத்த முயலுதல் கூடாது. நிலையின்மை - பொய்த்தன்மை.

பாம்பைப்போன்ற கொடியாருடன் பழகுதல் கூடாது. நஞ்சு, பாம்பிற்கு ஆகுபெயர் : அஃது ஈண்டுக் கொடியாரை உணர்த்திற்று.

நல்லோரினத்தைப் பெறாது தீயவருடன் நட்புடையோரை நட்பினராகக் கொள்ளுதல் கூடாது.

நல்லிணக்கம் இல்லார் என்றமையால்; தீயவரின் இணக்கமுடையவரென்று கொள்க.

நட்பிற்குரிய நல்ல பண்பில்லாதவர்களுடன் நட்புச் செய்ய வேண்டாம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆத்திசூடியில் `இணக்கமறிந் திணங்கு' என்றதும் காண்க.

துணையில்லாமல் தனியாக வழிச்செல்லல் கூடாது. தனிவழி என்பதற்கு மனிதர் நடமாட்டமில்லாத காட்டுவழி என்றும் பொருள் சொல்லலாம்.

தன்னை அண்டினவர்களைக் கெடுக்காமல்காத்தல் வேண்டும்.

அடுத்தவர்- வறுமை முதலியவற்றால் துன்பமுற்று அடைந்தவர். கெடுக்க வேண்டாம் என்றமையால் காத்தல் வேண்டும் என்றும் கொள்க.

மைந்து என்பது மஞ்சு எனப்போலியாயிற்று. (2)

   
3.மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
    மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
    தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
    சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
வனந்தேடுங் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) மனம்-உள்ளமானது, போனபோக்கு எல்லாம்- சென்றவாறெல்லாம், போக வேண்டாம்- செல்லாதே.

மாற்றானை - பகைவனை, உறவு என்று- உறவினன் என்று, நம்ப வேண்டாம் - தெளியாதே.

தனம்தேடி - பொருளை (வருந்தித்) தேடி, உண்ணாமல்- நுகராமல், புதைக்கவேண்டாம் - மண்ணிற் புதைக்காதே.

தருமத்தை - அறஞ் செய்தலை, ஒருநாளும்- ஒரு பொழுதும், மறக்க வேண்டாம் - மறக்காதே.

சினம்- வெகுளியை, தேடி - தேடிக்கொண்டு, அல்லலையும்- (அதனால்) துன்பத்தினையும் தேட வேண்டாம்-தேடாதே.

சினந்து இருந்தார் - வெகுண்டிருந்தாருடைய, வாசல்வழி -வாயில் வழியாக, சேறல் வேண்டாம்- செல்லாதே.

வனம் தேடும் - காட்டின்கண் (விலங்கு முதலியன) தேடித்திரியும், குறவருடை - குறவருடைய (மகவாகிய), வள்ளி- வள்ளி நாச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும்  பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) மனம்போன வழியில் தான் போகாமல் தன்வழியில் மனத்தைநிறுத்த வேண்டும்.

"எந்தநாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே" என்பதுபோல நெஞ்சை விளித்து, `மனம்போன போக்கெல்லாம்' என்றார்.

பகைவன் உறவினனாயினும் அவனை நம்பலாகாது.

பகைவன் நண்பன்போல் நடித்தாலும் அவனை நண்பனென்று நம்பிவிடக்கூடாது என்னலும் ஆம். உறவு: ஆகு பெயர்.

பொருளைத்தேடி அனுபவிக்காமல் புதைத்து வைத்தல் கூடாது. உண்ணாமல் என்பதனோடு அறஞ்செய்யாமல் என்பதும் சேர்த்துக்கொள்க.

நாள்தோறும் அறத்தினை மறவாது செய்தல்வேண்டும். மறக்கவேண்டாம் என்றமையால், நினைந்து செய்தல்வேண்டும் என்பது ஆயிற்று.

கோபத்தை வருவித்துக்கொண்டு துன்பமடையலாகாது. உம்மை எச்சவும்மை.

சினங்கொண்டிருந்தாருடைய வீட்டின் வழியாக நடத்தல் கூடாது.

இல்வாய் என்பது வாயில் என்றாகி வாசல் என மருவிற்று. சினத்திருந்தார் எனவும் பாடம்.

தேடும் என்பதற்கேற்ப விலங்கு முதலியன என்பது வருவிக்கப்பட்டது; வனம் என்பதற்கு அழகு என்று பொருள் கூறி அழகைத் தேடிய வள்ளியென்று இயைத்துரைத்தலும் ஆகும், (3)

   
4.குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
    கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம்
கற்றவரை யொருநாளும் பழிக்க வேண்டாம்
    கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோ டெதிர்மாறு பேச வேண்டாம்
    கோயிலில்லா ஊரிற்குடி யிருக்க வேண்டாம்
மற்றுநிக ரில்லாத வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) குற்றம் ஒன்றும்- (ஒருவர் செய்த) குற்றத்தை மாத்திரமே, பாராட்டி - எடுத்துச்சொல்லி, திரிய வேண்டாம்- அலையாதே.

கொலைகளவு - கொலையும் திருட்டும், செய்வாரோடு, செய்கின்ற தீயோருடன், இணங்கவேண்டாம்- நட்புச்செய்யாதே.

கற்றவரை - (நூல்களைக்) கற்றவரை; ஒரு நாளும் - ஒரு பொழுதும், பழிக்கவேண்டாம் - பழிக்காதே.

கற்பு உடைய மங்கையரை - கற்புடைய பெண்களை, கருத வேண்டாம் - சேர்தற்கு நினையாதே.

எதிர் - எதிரேநின்று, கொற்றவனோடு - அரசனோடு , மாறு - மாறான சொற்களை, பேசவேண்டாம்-பேசாதே.

கோயில் இல்லா - கோயில் இல்லாத, ஊரில் - ஊர்களில், குடிஇருக்க வேண்டாம்- குடியிருக்காதே.

மற்று - பிறிதொன்று, நிகர் இல்லாத - ஒப்புச்சொல்ல முடியாத, வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்-பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் -வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) ஒருவரிடத்துள்ள குற்றத்தையே எடுத்துத் தூற்றுதல் கூடாது. குற்றத்தை விட்டுக் குணத்தைப் பாராட்ட வேண்டும் என்பதாம். பிரிநிலை ஏகாரம் தொக்கு நின்றது.

கொலை செய்வாருடனும், களவு செய்வாருடனும் கூடுதல் கூடாது. செய்வாருடன் சேர்தல் கூடாது என்றமையால் அவை செய்தல் ஆகாது என்பது, தானே பெறப்படும்.

கல்விகற்ற பெரியாரை நிந்தித்தல் கூடாது. பழிக்கவேண்டாம் என்றமையால் புகழவேண்டும் என்பது பெறப்படும்.

கற்புடைய மாதர்மேல் விருப்பம் வைத்தல் கூடாது. இங்கே மங்கையர் என்றது தம் மனைவியல்லாத பிற மாதர்களை நினைத்தலும் செய்தலோடு ஒக்குமாகையால் நினைத்தல் கூடாது என்றார்.

அரசன் முன்னின்று அவனுக்கு மாறாகப் பேசுதல் கூடாது. மாறு- விரோதம்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருத்தல் கூடாது. திருக்கோயில் இல்லாத ஊர் கொடிய காட்டையொக்கும் (4)

   
5.வாழாமற் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்
    மனையாளைக் குற்றமொன்றுஞ் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
    வெஞ்சமரிற் புறங்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
    தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாருங் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) பெண்ணை - மனையாளை, வைத்து - (வீட்டில் துன்பமுற) வைத்து, வாழாமல் - (அவளோடு கூடி) வாழாமல், திரியவேண்டாம் - அலையாதே.

மனையாளை - பெண்டாட்டியின் மீது, குற்றம் ஒன்றும் - குற்றமான சொல் யாதொன்றும், சொல்லவேண்டாம் - சொல்லாதே.

வீழாத - விழத்தகாத, படுகுழியில் - பெரும் பள்ளத்தில், வீழ வேண்டாம் - வீழ்ந்துவிடாதே.

வெஞ்சமரில் - கொடிய போரில், புறங்கொடுத்து - முதுகு காட்டி, மீள வேண்டாம் - திரும்பிவாராதே.

தாழ்வான - தாழ்வாகிய, குலத்துடன்-குலத்தினருடன், சேர வேண்டாம் - கூடாது.

தாழ்ந்தவரை - தாழ்வுற்றவர்களை, பொல்லாங்கு - தீங்கு, சொல்ல வேண்டாம் - சொல்லாதே.

வாழ்வு ஆரும் - செல்வம் நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்ளி- வள்ளி நாச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி

நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே , வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) மனையாளோடு கூடி வாழாமல் அலைதல் கூடாது. திரிதல்- வேசையர் முதலியோரை விரும்பி அலைதல். இனி, பெற்ற பெண்ணைக் கணவனுடன் வாழாமல் தன் வீட்டில் வைத்து மாறுபட வேண்டாம் என்பதும் ஆம்.

மனைவியைப்பற்றி எவ்வகைக் குற்றமும் அயலாரிடத்துச் சொல்லுதல் கூடாது.

மனைவிக்குள்ளது தனக்கும் உள்ளதாம் ஆகலானும், கேட்ட அயலார் ஒரு காலத்துப் பழிக்கக்கூடும் ஆகலானும் சொல்ல வேண்டாம் என்றார். கற்புடைய மனைவிமீது குற்றம் சுமத்துவது பாவம் என்பதுமாம்.

விழத்தகாத படுகுழியில் விழுதல் ஆகாது. படுகுழி என்பது கொடுந்துன்பத்திற்கு ஏதுவாகிய தீயசெய்கையைக் குறிக்கின்றது. மீளாத துன்பத்தை யுண்டாக்கும் தீச்செய்கையைச் செய்யலாகாது என்க.

போரில் அச்சத்தால் முதுகுகாட்டி ஓடுதல்கூடாது, ஆண்மையுடன் எதிர்த்து நின்று போர்புரிய வேண்டுமென்க. புறம் - முதுகு. சமர் - போர், யுத்தம்.

தாழ்ந்த குலத்தாருடன் சேர்தல் கூடாது. குலம், அதனை உடையார்க்கு ஆகுபெயர். தாழ்ந்த குலத்தார் - இழிதொழில் செய்யும் குடியிற் பிறந்தவர். சேர்தல் - நட்புக்கொள்ளுதலும் சம்பந்தஞ் செய்துகொள்ளுதலும்.

உயர்ந்தநிலையிலிருந்து தாழ்வெய்தியவர்களைத் தீமையாகப் பேசுதல்கூடாது. தாழ்ந்தவர் என்பதற்குக் கீழோர் என்றும், வணங்கினவர் என்றும் பொருள் கூறுதலும் பொருந்தும். (5)