6-10
 
6.வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
    மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
    முன்கோபக் காரரோ டிணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம்
    வழிபறித்துத் திரிவாரோ டிணங்க வேண்டாம்
சேர்த்தபுக ழாளனொரு வள்ளி பங்கன்
    திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே

(ப-ரை.) வார்த்தை சொல்வார்- (பயனில்) சொற்கள் கூறுவாருடைய, வாய் பார்த்து - வாயைப் பார்த்துக் கொண்டு, திரியவேண்டாம் - அவரோடு கூட அலையாதே.

மதியாதார் - நன்கு மதிக்காதவருடைய, தலைவாசல் - கடை வாயிலில், மிதிக்க வேண்டாம்- அடியெடுத்து வைக்காதே.

மூத்தோர் - தாய், தந்தை, தமையன், ஆசான் முதலியவர்களும், அறிவிற்பெரியோர்களும் ஆவர்.

முன்கோபக்காரரோடு - முன்கோபமுடையாருடனே, இணங்க வேண்டாம் - சேராதே.

வாத்தியார்- (கல்வி கற்பித்த) ஆசிரியருடைய, கூலியை - சம்பளத்தை, வைத்திருக்க வேண்டாம் - (கொடுக்காமல்) வைத்துக்கொள்ளாதே.

வழி பறித்து - வழிப்பறி செய்து, திரிவாரோடு- திரிந்து கொண்டிருப்பவருடன், இணங்கவேண்டாம் - சேராதே.

சேர்த்த - ஈட்டிய, புகழாளன் - புகழுடையவனாகிய, ஒரு - ஒப்பற்ற, வள்ளி பங்கன்-வள்ளியம்மையாரைப் பக்கத்தில் உடையவனாகிய, திருகை - அழகிய கையின்கண், வேலாயுதனை-வேற்படையையுடைய முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, செப்பாய் - புகழ்வாயாக.

(பொ-ரை.) வீண் பேச்சுப் பேசுவார் சொற்களைக் கேட்டுக்கொண்டு அவர்பின் அலைதல் கூடாது.

வாய், சொல்லுக்கு ஆகுபெயர். வாய்பார்த்தல் என்றது "பண்கண்டளவில்" என்பதுபோல நின்றது.

மதியாதாருடைய வீட்டிற்குச் செல்லுதல் கூடாது. மதியாதார் - அவமதிப்பவர்.

மிதித்தல்- அடியெடுத்து வைத்தல், சேர்தல்.

பெரியோர் கூறியனவற்றை மறத்தல் கூடாது; பெரியோர் சொன்னபடி நடக்க வேண்டும் என்க.

மூத்தோர் - தாய், தந்தை, தமையன், ஆசான் முதலியவர்களும், அறிவிற் பெரியோர்களும் ஆவர்.

மிக்க கோபமுடையாருடன் நட்புக்கொள்ளுதல் கூடாது.

முன்கோபம் - பொறுமையின்றி முதலெடுப்பில் உண்டாகும் சினம். கோபக்காரருடன் சேரவேண்டாம் என்றதனால் கோபம் கூடாது என்பதும் ஆயிற்று.

கல்வி கற்பித்த ஆசிரியன் காணிக்கையைக் கொடாமல் இருத்தல் கூடாது.

உபாத்தியாயர் என்பது வாத்தியார் எனத் திரிந்தது.

வழிப்பறி செய்யும் கள்வருடன் சேர்தல் கூடாது.

வழிப்பறி செய்தல்-வழியிற் பயணம் போகிறவர்களின் பொருளைப் பறித்துக்கொள்ளுதல்.

சேர்த்த - சம்பாதித்த; சேர்த்த என்பது வலித்தல் விகாரமாயிற்று என்னலுமாம்.  (6)

   
7.கருதாமற் கருமங்கள் முடிக்க வேண்டாம்
    கணக்கழிவை யொருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம்
    பொது நிலத்தி லொருநாளும் இருக்க வேண்டாம்
இருதார மொருநாளுந் தேடவேண்டாம்
    எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன்
    குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே

(ப-ரை.) கருமங்கள்-(செய்யத்தக்க) காரியங்களை, கருதாமல் - (செய்யும்வழியை ) எண்ணாமல், முடிக்க வேண்டாம் - முடிக்க முயலாதே.

அழிவு கணக்கை - பொய்க்கணக்கை, ஒருநாளும்- ஒருபொழுதும், பேச வேண்டாம் - பேசாதே.

பொருவார் - போர் செய்வாருடைய, போர்க்களத்தில்- போர்(நடக்கும்) இடத்தின்கண், போக வேண்டாம் - போகாதே.

பொது நிலத்தில்- பொதுவாகிய இடத்தில், ஒருநாளும் - ஒரு பொழுதும், இருக்க வேண்டாம் - (குடி) இராதே.

இருதாரம் - இரு மனைவியரை, ஒருநாளும் - ஒருபொழுதும், தேடவேண்டாம் - தேடிக் கொள்ளாதே.

எளியாரை - ஏழைகளை, எதிரிட்டுக் கொள்ளவேண்டாம் - பகைத்துக் கொள்ளாதே.

குருகு - பறவைகள், ஆரும் - நிறைந்த, புனம் - தினைப்புனத்தை, காக்கும் - காத்த, ஏழை - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில்

உடையவனாகிய, குமரவேள் - குமரவேளின், பாதத்தை- திருவடியை, நெஞ்சே - மனமே, கூறாய் - புகழ்வாய்.

(பொ-ரை.) செய்யப்படும் காரியங்களை முடிக்கும் வழியை ஆராய்ந்து செய்தல் வேண்டும். ஒரு காரியத்தை அதனால் வரும் நன்மை தீமைகளை ஆராயாமற் செய்தல் கூடாது என்பதும் ஆகும்.

பொய்க்கணக்குக் கூறுதல் கூடாது.

வேற்றுமை உருபைப் பிரித்துக் கூட்டுக. பொய்நிலை பெறாதாகலின் அஃது அழிவு என்று சொல்லப்பட்டது.

பிறர் போர் செய்யும் இடத்தில் குறுக்கே செல்லலாகாது. வீணாகப் போரிலே கலந்து கொள்ளக்கூடாது என்றுமாம். தம் : சாரியை.

பலர்க்கும் உரிய பொது நிலத்தில் குடியிருத்தல் கூடாது.

பொது நிலம்-மந்தை, சாவடி முதலியன. பொதுவிடத்தில் பலரும் வருவார்களாகையால் அங்கே குடியிருப்பின் துன்பமுண்டாகும் என்க.

இரண்டு மனைவியரை மணந்து கொள்ளல் கூடாது. இரு மனைவியரைக் கொண்டால் பெரும்பாலும் அவர்களுக்குள் போராட்டமுண்டாகுமாதலின் தனக்குத் துன்பமேயன்றி இன்பம் இராதென்க. தாரம் - மனைவி.

ஏழைகளிடத்துப் பகைத்தல் கூடாது.

எளியார்- இடம் பொருள் ஏவல் இல்லார், எதிர்-பகை. மறுமையில் நரகத்திற் கேதுவாகலின் எதிரிட்டுக் கொள்ளவேண்டாம் என்றார்.

காத்த என்பதைக் காக்கும் என்றது காலவழுவமைதி, ஏழை - பெண், குமரவேள் - குமரனாகிய வேள்; குமரன் - இளைஞன்; முருகன். (7)

   
8.சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
    செய்தநன்றி யொருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடுங் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
    உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
    பிணைப்பட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) சேராத இடந்தனில் - சேரத்தகாத இடங்களில், சேரவேண்டாம் - சேராதே.

செய்தநன்றி - ஒருவன் செய்த உதவியை, ஒருநாளும் - ஒருபொழுதும் மறக்க வேண்டாம் - மறக்காதே.

ஊரோடும் - ஊர்தோறும் ஓடுகின்ற, குண்டுணியாய் - கோட் சொல்பவனாகி, திரிய வேண்டாம் - அலையாதே.

உற்றாரை - உறவினரிடத்து, உதாசினங்கள் - இகழ்ச்சியுரைகள், சொல்ல வேண்டாம் - சொல்லாதே.

பேர்ஆன - புகழ் அடைதற்குக் காரணமாகிய, காரியத்தை - காரியத்தை, தவிர்க்க வேண்டாம்- (செய்யாது) விலக்க வேண்டாம்.

பிணைபட்டு - (ஒருவனுக்குப்) பிணையாகி, துணைபோகி - துணையாகச் சென்று, திரியவேண்டாம்-அலையாதே.

வார்ஆரும் - பெருமை நிறைந்த, குறவர்உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) சேர்தற்குத் தகுதியில்லாதவருடன் சேர்தல் கூடாது.

தகாதவர் - கள்ளுண்போர், தூர்த்தர் முதலாயினார், தன்: சாரியை.

ஒருவர் செய்யும் உபகாரத்தை எப்பொழுதும் மறத்தல் கூடாது.

நன்றி மறப்பது தீராக் குற்றமாகும்;

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

என்பது திருக்குறள்.

"நன்றி மறவேல்"

என்றார் ஒளவையாரும்.

ஊர்தோறும் சென்று புறங்கூறுதல் கூடாது.

ஓடும் என்னும் பெயரெச்சம் குண்டுணி என்னும் பெயருடன் முடிந்தது. குண்டுணி-கோட் சொல்வோன் என்னும் பொருளில் வழங்குகிறது. ஊரோடும் என்பதற்கு ஊரிலுள்ள தீயவர்களுடன் சேர்ந்து என்று பொருளுரைத்தலும் ஆம்.

உறவின் முறையாரை மதியாது இகழ்தல் கூடாது.

புகழைத் தருதற்குரிய வினையைச் செய்யாதிருத்தல் கூடாது.

பேர், பெயர் என்பதன் மரூஉ ; பெயர் - புகழ்.

ஒருவனுக்குப் பிணையாகித் திரிந்துகொண்டிருத்தல் கூடாது.

கடன் வாங்குவோர்க்கும் குற்றஞ் செய்வோர்க்கும் பிணையாதல் துன்பத்தை யுண்டாக்கும்.

பிணை - புணை ; ஈடு - ஜாமீன்.

வார் - விலங்கு, பறவை முதலிய பிடித்தற்குரிய வலையும் ஆம். (8)

   
9.மண்ணின்று மண்ணோரஞ் சொல்ல வேண்டாம்
    மனஞ்சலித்துச் சிலுக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
    காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம்
    புறஞ்சொல்லித் திரிவாரோ டிணங்க வேண்டாம்
மண்ணளந்தான் தங்கையுமை மைந்தன் எங்கோன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) மண்ணில் நின்று - நிலத்தில் நின்று, மண்-மண்ணைப்பற்றி, ஓரம் - ஒருதலைச் சார்பாக, சொல்ல வேண்டாம் - பேசாதே.

மனம் - உள்ளம், சலித்து - இளைத்து, சிலுகிட்டு - (யார் மாட்டும்) சண்டையிட்டு, திரிய வேண்டாம் - அலையாதே.

கண் - அருளை, அழிவு செய்து- அழித்து, துயர் காட்ட வேண்டாம் - (பிற உயிர்கட்குத்) துன்பஞ் செய்யாதே.

காணாத-காணாதவற்றைப் பற்றி, கட்டுவார்த்தையை- கட்டுவார்த்தைகளை, உரைக்க வேண்டாம் - சொல்லாதே.

புண்பட - (கேட்போர் மனம்) புண்படுமாறு, வார்த்தைதனை - சொற்களை, சொல்ல வேண்டாம்-சொல்லாதே.

புறம் சொல்லி - புறங்கூறி, திரிவாரோடு - அலைபவருடன், இணங்க வேண்டாம் - சேராதே.

மண் அளந்தான் - நிலத்தை (மூவடியால்) அளந்த திருமாலுக்கு, தங்கை - தங்கையாகிய, உமை - உமாதேவிக்கு ; மைந்தன்-மகனும், எம்கோன் - எமக்குத் தலைவனும் ஆகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) நிலத்தின்மீது நின்று நிலத்தைப்பற்றிய வழக்கில் ஓரஞ் சொல்லுதல் கூடாது.

"ஓரஞ்சொல்லேல்" என்பது ஆத்திசூடி.

ஓரம்- நடுநிலையின்மை, பட்சபாதம்.

மனத்திட்ப மில்லாது கோபத்தால் யாருடனும் சண்டையிடுதல் கூடாது.

அருளின்றிப் பிற உயிர்களை வருத்துதல் கூடாது.

கண், கண்ணோட்டத்திற்கு ஆகுபெயர். ஈண்டு அருளைக் குறித்து நின்றது. இனி, கண்ணீர் ஒழுகுமாறு தனக்குள்ள துயரைப் பிறரிடத்துப் புலப்படுத்தல் வேண்டா என்பதும் ஆம். கண்ணழிவு என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு தடுத்து என்றும், பிரித்து என்றும் பொருள் சொல்லலுமாம்.

பிறர் செய்யும் நற்காரியத்தைத் தடுத்துஎன்றும், சேர்ந்திருப் போரைப் பிரித்து என்றும் கொள்ளவேண்டும்.

காணாதவற்றைக் கண்டதுபோல வைத்துப் பொய் கூறல் கூடாது.

கட்டு வார்த்தையை என மாற்றப்பட்டது. கட்டுவார்த்தை - கற்பனை வார்த்தை.

இனி, வார்த்தை என்பதற்குச் செய்தி என்று பொருள் கூறி, காணாத செய்தியைக் கண்டதுபோல உறுதியாகப் பேச வேண்டாம் என்று உரைத்தலுமாகும். கட்டுரைத்தல்- உறுதியாகப்பேசுதல்.

கேட்போர் மனம் வருந்துமாறு கொடுஞ்சொற் கூறலாகாது.

புண்படல் - புண்பட்டாற்போல் வருந்தல்.

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு"

என்பது திருக்குறள்.

புறங்கூறுவாருடன் சேர்தல் கூடாது.

புறஞ்சொல்லல் இன்னதென்பது முன்பு உரைக்கப்பட்டது. (9)

   
10.மறம்பேசித் திரிவாரோ டிணங்க வேண்டாம்
    வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரியவேண்டாம்
    தெய்வத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
    ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
    குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே

(ப-ரை.) மறம்பேசி- வீரமொழி கூறி, திரிவாரோடு (போருக்கு)அலைபவருடன், இணங்கவேண்டாம் - நட்புக்கொள்ளாதே.

வாதாடி- வாதுகூறி, அழிவு வழக்கு - கெடுவழக்கு, சொல்ல வேண்டாம் - கூறாதே.

திறம்பேசி - வலிமைகூறி, கலகம் இட்டு - கலகம் செய்து, திரிய வேண்டாம் - அலையாதே.

தெய்வத்தை - கடவுளை, ஒருநாளும் - ஒருபொழுதும், மறக்க வேண்டாம் - மறவாதே.

இறந்தாலும் - (கூறாதிருப்பின்) இறக்கநேரிடுமாயினும், பொய்தன்னை - பொய்யை, சொல்லவேண்டாம்- சொல்லாதே.

ஏசல் இட்ட - இகழ்ச்சி செய்த, உற்றாரை - உறவினரை, நத்த வேண்டாம் - விரும்பாதே.

குறம்பேசி - குறிசொல்லி, வாழ்கின்ற - வாழும், வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்-பக்கத்தில் உடையவனாகிய, குமரவேள் - முருகவேளின், நாமத்தை - பெயர்களை, நெஞ்சே - மனமே, கூறாய் - சொல்லித் துதிப்பாயாக.

(பொ-ரை.) வீரவாதம் பேசித் திரிவாருடன் நட்புக் கொள்ளுதல் கூடாது. மறம் பேசல் - தம் வீரத்தைத் தாமே புகழ்ந்து பேசுதல். திரிவார் - வீணே அலைகின்றவரும் ஆம்.

இனி, மறம்பேசி என்பதற்குக் கொலை முதலிய கொடிய காரியங்களைப் பேசி என்று உரைத்தலும் பொருந்தும்.

மன்றம் ஏறி அழிவழக்குப் பேசுதல் கூடாது.

அழி வழக்கு - வழக்கல்லாத வழக்கு ; பொய் வழக்கு.

வல்லமை பேசிக் கலகஞ் செய்தல் கூடாது. திறம்பேசல்-தன் வலிமை முதலியவற்றைப் புகழ்ந்து பேசுதல். கலகம் - சிறு சண்டை.

"வல்லமை பேசேல்" என்பது ஆத்திசூடி.

கடவுளை எப்பொழுதும் மறத்தல் கூடாது. சிந்தித்து வணங்கவேண்டும் என்க. ஒருநாளும் என்றது இன்பத்திலும், துன்பத்திலும் என்றபடி.

உயிர்நீங்க நேர்ந்தவிடத்தும் பொய் கூறுதல் கூடாது.

உயிரைக் கொடுத்தாயினும் உண்மையை நிலைநாட்டுதல் வேண்டும் என்பது கருத்து.

மதியாது இகழ்ந்த உறவினரை விரும்பிச் சேர்தல் கூடாது, நத்தல் - விரும்பல்.

குறமகளிர் சொல்லும் குறியைக் குறம் என்பர். குறி - சோதிடம்; ஒருவர் மனத்து நினைத்ததனைக் குறித்துக் கூறல். குறப் பெண்டிர் செய்கையை வள்ளிக்கு ஏற்றிக் கூறினார்.(10)