11-13
 
11.அஞ்சுபேர்க் கூலியைக்கைக் கொள்ள வேண்டாம்
    அதுவேதிங் கென்னின்நீ சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்றன் கூலி
    சகலகலை யோதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சி கூலி
    மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்றன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
    ஏதேது செய்வானோ ஏமன் றானே

(ப-ரை.) அஞ்சுபேர் கூலியை - ஐவருடைய கூலியை ; கைக்கொள்ள வேண்டாம் - கைப்பற்ற வேண்டாம் (கொடுத்து விடவேண்டும்), அது - அக்கூலி, ஏது என்னின் - யாது என்று கேட்பின், சொல்ல - நான் சொல்கின்றேன், நீ - நீ, கேளாய் - கேட்பாயாக, வண்ணான் கூலி - வண்ணானுடைய கூலியும், நாவிதன் கூலி - அம்பட்டன் கூலியும், சகலகலை - பல கலைகளையும், ஓதுவித்த - படிப்பித்த, வாத்தியார் கூலி - ஆசிரியர் கூலியும், வஞ்சம் அற - வஞ்சனை நீங்க, நஞ்சு அறுத்த - நச்சுக் கொடி அறுத்த,

மருத்துவிச்சி கூலி - மருத்துவிச்சியின் கூலியும், மகாநோவுதனை (நீக்குவதற்குஅரிய) கொடிய நோயினை, தீர்த்த - நீக்கிய, மருத்துவன் கூலி-வைத்தியன் கூலியும், (ஆம்); இவர் கூலி இவருக்குக் கொடுக்க வேண்டிய கூலியை, தஞ்சமுடன்- அன்புடனும், இன்சொல்லுடன் - இன்சொல்லோடும், கொடாத பேரை - கொடுக்காதவர்களை , ஏமன் - இயமன், ஏது ஏது - என்ன என்ன துன்பம், செய்வானோ- செய்வானோ, (நான் அறியேன்).

(பொ-ரை.) வண்ணான், அம்பட்டன், ஆசிரியர், மருத்துவிச்சி, மருத்துவன் என்னும் ஐவரின் கூலியையும் கொடுத்துவிட வேண்டும். இன்றேல் எமனால் துன்புறுத்தப்படுவார்கள். 

அஞ்சு ஐந்து என்பதன் போலி. கூலியென்னும் பொதுமை பற்றி அது என ஒருமையாற் கூறினார். கூலி என்பதை வண்ணான் என்பதோடும் ஒட்டுக. மருத்துவிச்சி, மருத்துவன் என்னும் ஆண்பாற் பெயர்க்குப் பெண்பாற் பெயர். ஏது ஏது என்னும் அடுக்குப் பன்மைபற்றி வந்தது; குறிப்புச் சொல். ஓ : இரக்கம். யமன் என்பது ஏமன் எனத் திரிந்தது. இங்கு தன், தான், ஏ, என்பன அசைகள்.   (11)

   
12.கூறாக்கி யொருகுடியைக் கெடுக்க வேண்டாம்
    கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
    துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை யிகழ வேண்டாம்
    வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

(ப-ரை.) ஒரு குடியை - ஒரு குடும்பத்தை, கூறு ஆக்கி - பிரிவுபடுத்தி, கெடுக்கவேண்டாம் - கெடுக்காதே. 

பூ தேடி - பூவைத் தேடி, கொண்டைமேல்- கொண்டையின் மீது, முடிக்க வேண்டாம் - முடித்துக் கொள்ளாதே.

தூறு ஆக்கி - (பிறர்மீது) பழிச்சொற்களை யுண்டாக்கி, தலையிட்டு - தலைப்பட்டுக்கொண்டு, திரியவேண்டாம் - அலையாதே.

துர்ச்சனாய் - தீயவர்களாகி, திரிவாரோடு - (ஊர்தொறும்) அலைவருடன், இணங்கவேண்டாம் - சேராதே.

வீறு ஆன - பெருமையுடையனவாகிய, தெய்வத்தை - தெய்வங்களை இகழவேண்டாம் - இகழாதே.

வெற்றி உள்ள - மேன்மையுடைய, பெரியோரை - பெரியோர்களை, வெறுக்கவேண்டாம் - வெறுக்காதே.

மாறு ஆன - (மற்ற நிலத்தில் உள்ளாருடன்) பகைமையுடையராகிய, குறவர் உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்-பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே-மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.

(பொ-ரை.) ஒரு குடியின்கண் ஒற்றுமையுடன் வாழ்பவர்களைப் பிரிவு செய்தல் கூடாது.

கூறு - பிளவு; பிரிவு. குடி: குடியிலுள்ளார்க்கு ஆகுபெயர்.

கொண்டைமேல் பூ முடித்தல்கூடாது.

பிறர் காணும்படி கொண்டைமேற் பூ முடித்துக்கொண்டு தூர்த்தர்போலத் திரியலாகாது என்க. மலர் பறித்துக் கடவுளுக்குச் சாத்தவேண்டும் என்னுங் கருத்துங் கொள்க.

பிறர்மேல் பழிச்சொற்களைக் கட்டிவிட்டு, அதுவே தொழிலாகத் திரிதல் கூடாது.

தலையிடல் - தொடர்பு வைத்துக் கொள்ளுதல்; பொறுப்பேற்றல்.

தீத்தொழில் உடையாருடன் சேர்தல் கூடாது.

துர்ச்சனர் - துட்டர், தீயோர்.

பெருமையுள்ள தெய்வங்களை இகழ்ந்துரைத்தல் கூடாது.

கூறு - பெருமை, வெற்றியுமாம்.

"தெய்வ மிகழேல்"என்பது ஆத்திசூடி.

பெரியோரை வெறுத்தல் கூடாது.

வெற்றி - பிறரினும் மேம்படுதல்; வாழவும் கெடவும் ஆற்றலுடைமையுமாம். வெறுத்தல்- இகழ்தல்.

மாறு - பகை : மாறுபட்ட நடையுமாம்; முருகக்கடவுளின் பெருமைக்கு மாறான என உரைப்பினும் அமையும்.   (12)

   
13.ஆதரித்துப் பலவகையாற் பொருளுந் தேடி
    அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
    உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோருங் கேட்ட பேரும்
    கருத்துடனே நாடோறுங் களிப்பி னோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழுந் தேடிப்
    பூலோக முள்ளளவும் வாழ்வர் தாமே

(ப-ரை.) ஆதரித்து - விரும்பி, பலவகையாய் - பல (நல்ல) வழியால், பொருளும் தேடி - பொருளையும் ஈட்டி, அறுமுகனை - ஆறுமுகங்களையுடைய முருகக்கடவுளை, அரும்தமிழால் - அரிய தமிழ்மொழியால், பாடவேண்டி - பாடுதலை விரும்பி, ஓதுவித்த - அவ்விறைவன் அறிவித்தருளிய, வாசகத்தால் - வாசகங்களினால், உலகநாதன் - உலகநாதன் என்னும் பெயருடையான், உண்மையாய் - மெய்ம்மையாக, பாடிவைத்த - பாடிய, உலகநீதி - உலகநீதி என்னும் இந்நூலை, காதலித்து - விரும்பி, கற்றோரும் படித்தவர்களும், கேட்டபேரும் - கேட்டவர்களும், நாள்தோறும் - ஒவ்வொருநாளும், கருத்துடன் - நல்லெண்ணத்தோடும், களிப்பினோடு - மகிழ்ச்சியோடும், போதம் - அறிவும், உற்று - உறப்பெற்று, மிகவாழ்ந்து - மிகவும் வாழ்வுடையராய், புகழும் தேடி - புகழையும் பெற்று, பூலோகம் உள்ளளவும் - ஊழிக் காலம் வரையிலும், வாழ்வர் - வாழ்வார்கள்.

(பொ-ரை.) உலகநாதன் என்னும் புலவன் பல நல்வழியாற் பொருள் சேர்த்து, பின்பு, தமிழ்மொழியால் முருகக் கடவுளைப் பாடவிரும்பி, அப்பெருமான் உணர்த்திய வாசகங்களாற் பாடிவைத்த 'உலக நீதி' என்னும் இந்நூலை விருப்புடன் கற்றவரும், கேட்டவரும் நல்லெண்ணமும், மனமகிழ்ச்சியும், ஞானமும், வாழ்வும், புகழும் உடையவர்களாய் உலகமுள்ளவரையும் வாழ்வார்கள்.

இப்பாட்டின் முற்பகுதியால் இந்நூலைப் பாடியவர் உலகநாதன் என்னும் பெயரினர் என்பதும், அவர் பல வழியாலும் பொருள் தேடியதுடன் முருகக் கடவுளிடத்தில் அன்புடையவராயிருந்தார் என்பதும் உலகநீதி என்பது இந்நூற்பெயரென்பதும் விளங்குகின்றன. பிற்பகுதியில் இதனைக் கற்றவரும் கேட்டவரும் அடையும் பயன்கள் கூறப்பட்டன. பொருளும் தேடி என்பதிலுள்ள உம்மை கல்வியும் தேடினார் என்பதைக் குறிப்பிடுகின்றது. பொருள் தேடி என்பதற்கு முருகக் கடவுட்குப்பொருள் தேடிவைத்து என்றும், 'ஓதுவித்த' என்பதற்குத் தனக்கு ஆசான் கற்பித்த என்றும் கூறுதலுமாகும். இனி, உலகநாதன் ஓதுவித்த வாசகத்தால் எனக் கொண்டு கூட்டி, உலகநாதன் கேட்டுக்கொண்டபடி என்றுரைத்தலுமாகும்; அப்பொழுது இந்நூலைச் செய்தோன் பெயர் விளங்கவில்லை. கேட்டவர் என்பது உலக வழக்கின்படி கேட்ட பேர் என்றிருக்கிறது. உள்ள அளவும் என்பது உள்ளனவும் என்றாயிற்று. தாம்,ஏ: அசைகள். 

உலக நீதி

முற்றிற்று