1. கடவுள் வாழ்த்து

நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று

(பொருள்.) இளமை  நீரில் குமிழி - இளமைப்பருவம் நீரிலுண்டாகும்குமிழியாகும்.  நிறை செல்வம்  நீரில் சுருட்டும் நெடுதிரைகள் - நிறைந்த செல்வம்நீரிலே காற்றினாற் சுருட்டப்படும் உயர்ந்த அலைகளாகும், யாக்கை  நீரில் எழுத்துஆகும் - உடம்பு நீரிலெழுதிய எழுத்தாகும்; (இங்ஙனமிருக்க), நமரங்காள் - நம்மவர்களே!'எம்பிரான் மன்று  வழுத்தாதது என்னே - நம்கடவுளுடைய மன்றினை (அம்பலத்தை) வாழ்த்தி வணங்காதது ஏனோ?

(விளக்கம்.) ஆகும்:கடைநிலைத்தீவகம்;  இதைக் குமிழி, திரைகள்என்பவற்றிற்குங் கூட்டுக. நிலையாமையைக் காட்டுதற்குக் குமிழி, திரை எழுத்து என்பனஉவமிக்கப்பட்டன. அங்ஙனம் உவமிக்கப்பட்டவை மூன்றும் நீரில் நிகழும் நிகழ்ச்சிகளாயிருத்தலின், அந்நீரோட்டத்தை இளமையும்செல்வமும் யாக்கையும் பொருந்திய வாழ்க்கைக்கு உவமித்துக் கொள்க. உவமைகள் உருவகமாகவந்தமையால் கருத்துக்கள் பின்னும் உறுதியாயின; இளமை எய்திப் பொருள் தொகுத்து உடம்பைவிடுதலால் அவை தம்மை அம்முறையே வைத்தார். இளமை, உருத்திரண்டு அழகு கெழுமி இருப்பதுபோல்இருந்து சிறிது காலத்தில் மாறுதற்கும் செல்வம், மிகுந்துங் குறைந்தும் மறைந்தும் எழுந்தும்நீளத்தொடர்ந்தும் தொடராதும் மாறுபடுதற்கும், நன்றாயிருக்கும் உடம்பு சட்டென்று இறத்தற்கும்முறையே குமிழி முதலானவை உவமமாக வந்தன.  முகிழ்என்பது சிவிறி; விசிறி சதை, தசை என்றாற்போல, எழுத்து நிலைமாறிக் குமிழ் என்றாயிற்று.அது வினைமுதற் பொருளதான  இகரவிகுதிஏற்றது.  குமிழி, செல்வம் என்பன,தொழிலடியாகப் பிறந்த பெயர்கள்.  நெடுந்திரை- உயர்ந்த அலை. என்: எவன் என்பதன் விகாரம். என்னே எம்பிரான் மன்று வழுத்தாததுஎன்பதற்கு, என்னே கடவுளை வழிபடாதது என்னும் பொதுப்பொருள் கொள்க. யாக்கை - தோல் நரம்புமுதலியவற்றாற் கட்டப்படுவது. நமரங்காள்: நமர்கள் என்னும் முறைப்பெயர் ஈற்றயல் அகரம்ஆகாரமாகி, விளியேற்று இடையே அம்சாரியை பெற்றது. வழுத்தாதது: எதிர்மறைத் தொழிற்பெயர்.

இஃது அறிவுரையோடு கூடிய கடவுள் வாழ்த்துச் செய்யுளென்க.இவ்வாறு கொள்ளும் முறையைத் திருக்குறட்கடவுள்வாழ்த்து அதிகாரத்தான் அறிக.

(கருத்து.) இளமையும் செல்வமும்யாக்கையும் நிலையாமையால், அவை உள்ள பொழுதே இறைவனை வழிபட்டுக் கொள்கவென்பது.       (1)