(பொ-ள்.) கற்று ஆங்கு அறிந்து-அறிவுநூல்களைக் கற்று அவற்றின் மெய்ப்பொருளை உணர்ந்து, அடங்கி - அவற்றிற்கேற்பஅடக்கமாய், தீது ஒரீஇ - (அந் நூல்களிலல் விலக்கிய) தீயகாரியங்களைக்கைவிட்டு, நன்று ஆற்றி - (அந்நூல்களில் விதித்த) நற்காரியங்களைச் செய்து, பெற்றதுகொண்டு மனம் திருத்தி - கிடைத்ததைக் கொண்டு மனம் அமைந்து அதனை ஒரு வழிப்படுத்தி,பற்றுவதே பற்றுவதே பற்றி - தாம் அடைய வேண்டிய வீட்டு நெறியையும் அந் நெறிக்குரியமுறைகளையும் மனத்திற் கொண்டு, பணி அற நின்று - சரியை முதலிய தொழில்கள் மாள அருள்நிலையில் நின்று, ஒன்று உணர்ந்து - தனிப்பொருளாகிய இறைவனை அறிந்து, நிற்பாரே -நிற்கின்ற ஞானியரே, நீள்நெறி சென்றார் - வீட்டையும் வழியில் நின்றவராவர். (வி-ம்.) அறிவு நூல்களில்விலக்கிய தீயகாரியங்களாவன : காமம் கோபம் முதலியன; அவற்றின்கண்விதித்த நற்காரியங்களாவன: கொல்லாமை, வாய்மை முதலியன. ஓரீஇ :சொல்லிசையளபெடை. பற்றுவது இரண்டனுள் முன்னது வீட்டைப் பற்றும் நெறி; பின்னது அந்நெறியைப் பற்றும் முறை ; பற்றுவது : வினையடிப் பகுபதப் பெயர். பணியற நிற்றல் - முதற் பொருளோடு தான் அதுவென வேறாகாது நிற்றல். (க-து.) அறிவு நூல்களைக்கற்று அதன்படி நடந்து மனத்தை ஒருவழிப்படுத்தித் தனிப்பொருளாகிய இறைவனை உணர்ந்து நிற்பாரே வீடடைவர். (101) |