102. முடிபொருள்

ஐயந் திரிபின் றளந்துத் தியில்தெளிந்து
மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் தூங்குவார் - தம்முளே
காண்பதே காட்சி கனவு நனவாகப்
பூண்பதே தீர்ந்த பொருள்

(பொ-ள்.) அளந்து - மறை முடிவின் அளவைகளால் இறைவன், உயிர்,பற்று இவற்றின் தன்மைகளை அளவு செய்து, ஐயம் திரிபு இன்று - அவற்றில் ஐயமும் திரிபுமில்லாமல்,உத்தியில் தெளிந்து-கருத்தில் தெளிவுற்று, மெய் உணர்ச்சிகண் விழிப்ப - மெய்யறிவாகியகண்விழித்து, தூங்குவார் - அறிவுத் துயில் செய்வர், தம் உள்ளே - தம் உள்ளத்தில்,காண்பதே காட்சி - காணுங் காட்சியே காட்சியாகும், கனவு - (அந்த ஞானத்துயிலிற் காணும்)கனவை, நனவாக - விழிப்பு நிலையாக,பூண்பதே - அடைவதே; தீர்ந்த பொருள் - முடிந்தநிலையாகும். (சித்தாந்தமாகும்.)

(வி-ம்.) ஐயமாவது-இறைவன் உளனோ இலனோ என்னும் ஐயப்பாடு, திரிபு -ஒன்றை மற்றொன்றாகக் கருதும் அறிவு மயக்கம் நனவு-விழிப்பு ; வாழ்க்கை ; கனவு நனவாகப்பூண்பது - அறிவு நிலையிற் காணப்பட்ட நுண்ணிய நுகர்வை வாழ்க்கை நிலையினுங்கண்டு நிற்றல், என்றது ஈண்டும் இறைபணி நிற்றலென்பது. மெய்யுணர்ச்சியின்கண்-அகக்கண் ; மனம் பதி முதலியவற்றை உள்ளவாறுணர்ந்தஅறிவு. இன்றி என்னும் வினையெச்சம் செய்யுளில் இன்று என வந்தது. கண்விழிப்பத்தூங்குவார் என்பதற்கு அருள்நிலையில் விழிப்பும் உலக நிலையில் துயிலுமுடையார்என்க.

(க-து.) மெய்யுணர்வு பெற்று இறைவனோடு ஒற்றுமையுடன் நிற்பவரேவீடுபேற்று நெறியில் ஒழுகும் ஞானியராவர்.      (102)