12. நோற்றார் பெருமை

இவறன்மை கண்டும் உடையாரை யாரும்
குறையிரந்துங் குற்றவேல் செய்ப - பெரிதுந்தாம்
முற்பகல் நோலாதார் நோற்றாரைப் பின்செல்லல்
கற்பன்றே கல்லாமை யன்று

(பொ-ள்.) இவறன்மை கண்டும் - ஈயாத்தன்மையைத் தெரிந்துகொண்டிருந்தும், உடையாரை - செல்வமுடையவர்களை,யாரும்- எல்லாரும், குறையிரந்தும் குற்றேவல் செய்ப - பொருள் வேண்டி அதன் பொருட்டுக்கைவேலைகளும் செய்வார்கள், முன்பகல் பெரிதும் தாம் நோலாதார் - முன்பிறப்பில் தாங்கள் மிகவும்தவம் செய்யாதவர்கள், நோற்றாரைப் பின் செல்லல் கற்பு அன்றே - தவம் செய்தவர்களைப்பின்சென்று வேண்டுதலன்றோ கல்வியறிவாகும்; கல்லாமை அன்று - அஃது அறியாமையன்று. 

(வி-ம்.) தவமுடையாரைவேண்டுதல் கல்விக்கு அழகு என்றமையாற் பொருளுடையாரை வேண்டுதல் அழகன்று என்பது பெறப்படும்இஃது இசையெச்சம். இவறன்மை - கேட்டபொழுது பொருள் கொடாமை, இஃது `இவறலும் மாண்பிறந்தமானமும்’* என்ற விடத்துப் பரிமேலழகர் இவறலும் என்பதற்கு “வேண்டியவழிப் பொருள்கொடமையும்” என்று உரைகூறுதலின் வைத்து அறியப்படும். குறையிரத்தல்:இஃது ஒருசொன்னீர்மைத்தாய், நின்று வேண்டுதல்என்னும் பொருள் தந்து நின்றது. குற்றேவல் - எடுபிடிவேலை. உம்மையைக் குற்றேவலுக்குக் கூட்டுக. பகல் - பிறப்புணர்த்திற்று. கல் என்னும் பகுதிவிவ்விகுதி பெற்றுக் கல்வி யென்றாயதுபோல், புவ்விகுதி பெற்றுக் கற்பு என்றாயிற்று. கல்விகற்பு என்பன ஒரு பொருட் கிளவிகள், கற்பன்றே - என்பதனோ டமையாமற் கல்லாமையன்று என்றுபின்னுங் கூறியது தெளிவின் பொருட்டு. கற்பன்றே என்றது, ஈதன்றோ கற்பு என்றபடி. முற்பகலில்தவம் மிகுதியுஞ் செய்து செல்வராயுள்ளாரை, அவ்வாறு தவம் செய்து செல்வம் பெறாதஇலம்பாட்டார் பின் செல்வதன்றோ கல்வி யறிவின் பயன் அஃது அறியாமையன்று’ என்று உரைகூறுவாருமுளர்: பொருளுடையாருள் இவறன்மை இல்லாதாரே தவமுடையராதலின், அது பொருளன் றென்பதுகண்டுகொள்க, நோற்றாரைப் பின் செல்லல் `கற்பன்றே கல்லாமையன்று’ என்றமையின், இவறன்மைகண்டு முடையாரை யாருங் குறையிரந்துங் குற்றேல் செய்தல் கல்லாமையன்றே கற்பன்று என்பதும்பெறப் படுமாறறிந்து கொள்க,

(க-து.) பொருளுடையாரினும் தவமுடையார் உலகத்தவராற் பின்பற்றத்தக்கவராவர்,(12)
________________________________

* திருக்குறள், குற்றங்கடிதல், 2