13. கல்வியழகே யழகு

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோ ரணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக் கழகுசெய் வார்

(பொ-ள்.) முற்ற - ஒரு காலத்திலும், முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா - முழுமுழு மணிகளாற் செய்யப்பட்டநகைக்கு வேறு நகைவேண்டா. யாரே அழகுக்கு அழகு செய்வார் - எவர்தாம் அழகுக்கு அழகுசெய்வார்கள்’ (அதுபோல), கற்றோர்க்குக் கல்வி நலனே கலன் அல்லால் - படித்தவர்களுக்குஅப் படிப்பினழகே அழகாவதல்லாமல், மற்றோர் அணிகலம் வேண்டா ஆம்-அவருக்கு வேறொரு நகையழகுவேண்டுதல் இல்லையாம்.

(வி-ம்.) முற்ற - என்றது, எக்காலத்திலும் என்பதுணர்த்திற்று, உடைத்துச் சாணை தீட்டப்பட்டபொடிமணிகளாலல்லாமல் முழு மணிகளாலேயே செய்யப்பட்ட நகையாம் என்றற்கு முழுமணிப் பூண்என்றார். பூண்: முதனிலைத் தொழிலாகு பெயர்: கல்வி நலன் என்பது நல்ல கல்வியைக் குறித்தது;கல்வியழகு என்பது பொருள். நலன், கலன்: கலம் என்பவற்றின் போலி, முழுமணி - மாணிக்கம்;அஃது அறிவு நூற்கல்வி. மற்று - பிறிது. *`ஒருமொழி யொழிதன் இனங்கொளற் குரித்தே’என்பதனால் நகை என்னும் உவமையோடு, உடை முதலான அழகுகளையுங் கொள்க, இவையெல்லாம் தரும்அழகுகளை விடக் கல்வியாலாகும் அழகு பெரிதென்பது.

“குஞ்சிஅழகும்கொடுந்தானைக்கோட்டழகும்
மஞ்சள்அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம்என்னும் நடுவு நிலைமையால்
கல்விஅழகே அழகு”

என்னும் நாலடியாராலுங் காண்க.ஆம்: அசை.

(க-து.) செல்வ வாழ்க்கையினுங்கல்வி வாழ்க்கையே சிறந்தது. (13)  
______________________________________

*    நன்னூல்; பொதுவியல், 7.