(பொ-ள்.) கனம்குழாய் - பளுவான காதணியை உடைய பெண்ணே!, முற்றும் உணர்ந்தவர் இல்லை - எல்லாம்தெரிந்தவர் உலகத்தில் ஒருவரும் இல்லை; முழுவதூஉம் கற்றனம் என்று களியற்க - ஆதலால்எல்லாவற்றையும் கற்றுவிட்டோம் என்று செருக்காதே, ஏனென்றால், சிறு உளியால் - மிகச்சிறிய உளியினால், கல்லும் தகரும் - மலைகளும் உடையும்; கொல் உலைக் கூடத்தினால் தகரா -ஆனால் கொல்லனுடைய உலைக்களத்தில் உள்ள சம்மட்டியினால் அம்மலைகளும் உடையா.
(வி-ம்.) உணர்ந்தவர் இல்லை என்று உயர்திணைப் பெயருக்கு இல்லையென்னும் பயனிலை கொடுத்து முடித்தலை, *“ வேறு இல்லை உண்டு ஐம்பால் மூவிடத்தன” என்பதனாற் கொள்க. கற்றனம்; தன்மை ஒருமைஉட்கொண்டது; சிறப்பின் பொருட்டுப் பன்மையில் வந்தது. கல்-மலை; இஃதிப் பொருட்டாதல்“கல் இயங்கு கருங்குற மங்கையர்”+ என்னுங் கம்பர் மொழியிற் காண்க. தகரா: எதிர்மறைப்பலவின்பால் வினைமுற்று. கொல்- கொல்லன்; விகுதிகெட்டுப் பகுதியளவாய் நின்றது. இங்ஙனம்வருதலைக்”கொல் உலை வேற்கண் நல்லார்” + என்னும் நைடதப் பாட்டானும் அறிக. உலை,உலைக்களத்துக்கு வருதலும் அதன்கண் உள்ளது. கூடம் என்பது சம்மட்டியை உணர்த்துதலும் “ கூடம்எடுத்து அங்கைத் தலத்தால் அறைதிர்”* என்பதன்கண் அறியப்படும். முதலிரண்டடிகளுக்குப்பின்னிரண்டடியின் உவமையால் ஏதுக்கூறினார். உவமம், சிறிது கற்றாரும் பெரிது கற்றாரை வென்றுவிடுவர் என்னும் வேறொரு பொருளையும் உட்கொண்டு நின்றது. (க-து.) கற்றனம் என்று செருக்கடையலாகாது. (14) ________________________________ * நன்னூல், வினையியல், 20 + இராமா, வரைக,61. + நைடதம், நாட்டுப். 27. |