(பொ-ள்.) தம்மின் மெலியாரை நோக்கி - தம்மை விடச் செல்வத்திற் குறைந்திருப்பாரைப் பார்த்து,தமது உடைமை அம்மா பெரிது என்று அகம் மகிழ்க - தாம் பெற்ற செல்வப்பொருள், அம்மா!மிகுதியாகும் என்று உள்ளம் மகிழ்ந்து கொள்க: (ஆனால்) தம்மினும் கற்றாரை நோக்கி -தம்மைவிட மிகுதியாகப் படித்திருப்பவர்களைப் பார்த்து, நாம் கற்றதெல்லாம் எற்றே இவர்க்குஎன்று கருத்து அழிக - நாம் படித்த படிப்பெல்லாம் இவர் படிப்புக்கு எந்த அளவின் தன்மையதுஎன்று வருந்திச் செருக்குக் கருத்தை விட்டுவிடுக. (வி-ம்.) செல்வத்துக்குப் பெயராக வரும் உடைமை என்பதைக் கூறினார், செல்வநிலையிலும் இங்ஙனமேதம்மின் மெலியாரைக் கண்டு அகம் மகிழ்தற்கும், பெரியாரைக் கண்டு கருத்தழிதற்கும் என்க.‘அகம் மகிழ்க’ என்றார், தம் மகிழ்ச்சியைப் புறத்திற் காட்டலாகா தென்றற்கு, ‘அழிகஎன்றார். கல்விச்செருக்கின்பால் சான்றோர்களுக்கு உள்ள வெறுப்பைத் தேற்றுதற்கு,உடைமை-செல்வம், `இவறன்மை கண்டும் உடையாரைக்” (12) என்று முன்னும் வந்தது, இச்செய்யுள்,உள்ளக்கருத்தை நோக்கியதாதலால், உடைமை என்பதைப் பண்புப் பெயராகக் கொண்டு உடையராந்தன்மை என்று பொருள் செய்தலும் ஒன்று. இஃது *`எம்மையுடையார் எமையிகழார்’ என்னும் சிவஞானபோதத் திருமொழியிலும் +”உடைமையுள் இன்மை” என்னும் திருவள்ளுவர் திருமொழியிலும்விளங்கும். திருவள்ளுவர் திருமொழியில் உள்ள உடைமை என்பதற்கு உரையாசிரியர் பரிமேலழகர்”உடையனாந் தன்மை” என்று பொருளுரைத்தார். அம்மா: வியப்புணர்த்தும் இடைச்சொல், எல்லாம்முழுமைத் தன்மையை ஏற்று அளவினையுங் குறித்தது. (க-து.) செருக்கும் வருத்தமும் இல்லாமல் மேன்மேலும் கற்றலிலே கருத்தூன்றி நிற்றல் வேண்டும், (15) __________________________________ * நைடதம்,சந்திரோபாலம்பனப் படலம்; 12. * சிவஞானபோதம், அவையடக்கம் + திருக்குறள் - விருந்தோம்பல் : 9. |