19. தற்புகழ்ச்சியின் இழிவு

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் - தன்னை
வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்
நயவாமை யன்றே நலம்

(பொ-ள்.)  தன்னை வியப்பிப்பான்தற்புகழ்தல்-தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே புகழ்ந்துகொள்ளுதல், தீச்சுடர் நல்நீர் சொரிந்து வளர்த்தற்று-குளிர்ந்த நீரை விட்டுத்தீவிளக்கைவளர்த்தது போலாம்; ஆதலால், தன்னை வியவாமை அன்றே - வியப்பாவது தன்னைத்தான்புகழ்ந்து கொள்ளாமை யன்றோ நன்மதிப்பாகும்; இன்பம் நயவாமை அன்றே நலம்-இன்பத்தை விரும்பாமையன்றோ இன்பமாகும்?

(வி-ம்.) தீ வளரும் என்னுநீர்விட்டால் முன்னிருந்த தீயும் எப்படி வளராது அவிந்தே போகுமோ அதுபோலவே,தனக்கு மதிப்பு மிகுமென்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டால் இதற்கு முன்னிருந்த மதிப்புமிகாது அழிந்தே போகும் என்பது. வியப்பிப்பான்; பானீற்று வினையெச்சம். மணிச்சுடர்முதலாயின இருத்தலின், இதனைத் தீச்சுடர் என்றார். தீச்சுடர் என்ற குறிப்பால்நல்நீர் என்பது தண்ணீராயிற்று. சொரிந்து என்னுங் குறிப்பினால் எரியும்போது நெய்சொரிந்து தீ வளர்த்தல் போல, வளருமென்று, எரியும்போது தண்ணீர் சொரிந்து அதன் வளர்ச்சியை எதிர்நோக்கினானென்பது பெறப்படும். இங்ஙனம் கூறவறியாது,எண்ணெய் விடுதற்கு ஈடாக அகலில் தண்ணீர் நிரப்பித் தீ வளர்த்தான், என்று சிறவாப்பொருளுரைப்பாருமுளர். இன்பம் நயவாமையன்றே நலம் என்பதை வியவாமை யன்றே வியப்பு என்பதற்குஉவமையாகக் கொள்ளலுமாம். நலம்-ஈண்டு இன்பம், நயவாமையே இன்பமாவதென்பது, “இன்பம்இடையறா(து) ஈண்டும் அவா என்னும, துன்பத்துள் துன்பம் கெடின்”* என்னும் வாய்மொழியினால்இனிது விளங்கும். ஆவது என்பதை நலத்திற்குங் கொள்க.

(க-து.) தற்புகழ்ச்சி இகழ்ச்சியைத்தரும்           (19)  
_____________________________

*    திருக்குறள். அவாவறுத்தல், 9.