2. கல்வியின் சிறப்பு

அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல் இசையும் நாட்டும் - உறும் கவல் ஒன்று
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கு இல்லை
சிற்றுயிர்க்கு உற்ற துணை

(பொ-ள்.) அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும் - ஒழுக்கமும் செல்வமும் இன்பமும் என்னும் மூன்றையும்வீடுபேற்றையும் கொடுக்கும், புறங்கடை நல்இசையும் நாட்டும்-உலகத்தில் குற்றமற்ற புகழையும்நிலைநிறுத்தும், உறும் கவல்ஒன்று உற்றுழியும் கை கொடுக்கும் - நேரக்கூடிய வருத்தமொன்றுநேர்ந்த பொழுதும் கைகொடுத்து உதவிசெய்யும், சிறு உயிர்க்கு உற்றதுணை கல்வியின் ஊங்குஇல்லை - ஆதலால் சிறிய உயிர்களாகிய மக்கட்குத் தக்கதுணை கல்வியைவிடப்பிறிதில்லை.

(வி-ம்.) வீடு,முதல் மூன்றன் பயனாகலானும் மறுமையில் எய்துதற்குரியதாகலானும் அதனை மட்டும் உம்மைகொடுத்துவேறு பிரித்தார். புறங்கடை புறத்தில்; புறம் என்றது கற்றறிந்த புலவன் இருக்கும் ஊர்க்குப்புறனாய இடம் என்னும் பொருண் மேல் நின்றது. கடை: ஏழாம் வேற்றுமையுறுபு; அன்றி, இலக்கணப்போலியுமாம். உறுகவல்; முன்வினைப் பயனாகக் கட்டாயம் வந்தே தீருங் கவலைக்கிடமான செய்கை.கவல்: முதனிலைத் தொழிற்பெயர். உழி- பொழுது; இடமுமாம். ஊங்கு: மிகுதிப் பொருள் தருவதோர்இடைச்சொல். சிற்றுயிர் - அறிவிலும் ஆற்றலிலும் சிறுமையுடைய உயிர், அது மலத்தாற்றொடக்குற்று ஏங்குஞ் சிறுமையையும் குறித்து நின்றது. துணையாயிருப்பதென்பதுஉற்றுழியுதவலாகலின், அவ்வுற்றுழியுதவலுக்கு வேறாக அதனினும் மேம்பட்ட நல்லிசையையும் அறமுதலாநான்கினையும் தரவல்லதாதலால், கல்வி உற்ற துணையாயிற்று.  இச்செய்யுளில் உள்ள பயக்கும், நாட்டும், கைகொடுக்கும் என்னுஞ் சொற்கள்மிக்க ஆற்றலுடையவை. பயக்கும் நாட்டும் கொடுக்கும் என்பனவற்றைப் பெயரெச்சமாக்கிக்கல்விக்கு அடைமொழி யாக்கலுமாம். கைகொடுக்கும்-கைகொடு; பகுதி, கைகொடுத்தலாவது  இடையே வந்த இடுக்கணைக் கெடுத்துச் செய்யத்தக்கதுஇதுவென அறிந்து உள்ளம் ஓங்குவதற்கு ஏதுவான அறிவினை உண்டாக்குதல்,இசையும், உற்றுழியும்: உம்மைகள் இறந்ததுதழீஇய எச்சப்பொருளன. அறமுதல் நான்கையும் இசையையும்உற்றுழி உதவியையும் செய்யவல்லது கல்வி என்பதை நாயனார், முறையே "ஒருமைக் கண்தான்கற்ற கல்வி ஒருவற், கெழுமையும் ஏமாப்புடைத்து " * "யாதானு நாடாமா லூராமாலென்னொருவன், சாந்துணையுங் கல்லாதவாறு"+ கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை"+என்று  அருளினார்.

(க-து.) மக்களாய்ப்பிறந்தார் கல்வியே தக்க துணையென்று நம்பிக் கற்கற்பாலார்.
___________________________________

*திருக்குறள், கல்வி-8. +திருக். கல்வி -7. + திருக்.கல்வி-10.