20. பிறர் நன்மதிப்புறல்

பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர்
சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்

(பொ-ள்.)  பிறரால்பெருஞ்சுட்டு வேண்டுவான் - மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுவதற்காக பெருமதிப்பைவிரும்புமொருவன், யாண்டும் மறவாமே நோற்பது ஒன்று உண்டு - எப்பொழுதும்மறவாமற் செய்யத்தக்கது ஒன்றிருக்கின்றது; (அது), பிறர் பிறர் சீர் எல்லாம்தூற்றிச் சிறுமை புறம் காத்து - மற்றவருடைய பெருமைகளை யெல்லாம் மறைக்காமல் வெளியே பரப்பிஅவர்கள் தீயவொழுக்கத்தை மட்டும் அங்ஙனம் வெளியே பரப்பாமற் காத்து; யார் யார்க்கும்தாழ்ச்சி சொலல்- எல்லாரிடத்திலும் வணக்கமான மொழிகளையே பேசுதலாம்.

(வி-ம்.) பிறராற் சுட்டப்படும் சுட்டென்று கொள்க. சுட்டு இங்கு ஒருவன் நலன்களைச் சுட்டிஎண்ணுதலாலான மதிப்புக்கு வந்தது. வேண்டுவான்-விரும்புவான். “வேண்டுவார்வேண்டுவதே ஈவான் கண்டாய்”* என்பதிற் காண்க. நோற்பது - நோன்புபோல எண்ணிச்செய்க என்பது. பிறரைப் பற்றிய நல்ல செய்திகளையெல்லாம் மறைக்காமல் வெளியேபரவச்செய்து கெட்ட செய்திகளை அங்ஙனம் பரப்பாமற் காத்துக்கொள்ளும் உயர்ந்த செயல்கடவுளுக்கு நோன்பெடுக்கும் வணக்கச்செயலோடு ஓராற்றால் ஒத்ததாம் என்பது அதன்குறிப்பு. பிறர் பிறர்: யார் யார் என்னும் அடுக்குகள் பன்மைப்பொருளன. தூற்றுதல் என்பது, பெரும்பாலும் கெட்ட செய்திகளை வெளியிற்பரப்புவதற்கே வருதல் வழக்கு: ஆனால் அச்சொல்லை இங்கு நல்லசெய்தியை வெளிப்படுத்துதற்குக்கூறினார், அக்கெட்ட செய்திகளைப் பரப்புவது போல் அவ்வளவு விரைவோடும் அவாவோடும்எங்கும் இந்நல்ல செய்திகளைப் பரப்புதல் வேண்டுமென்றற்கு, புறங்காத்து-புறத்தே போகவொட்டாத படி காத்து: தாழ்ச்சி - தாழ்மையான மொழியின்மேல் நின்றது.மேற்செய்யுளாலும் இச்செய்யுளாலும் பெறப்படுவது, தன்னைப் பிறர்மதிக்க வேண்டுமென்றுஎண்ணுபவன், தன்னைத்தான் புகழ்ந்து கொள்ளாமல் தன்னைத்தாழ்மையாகவே உரைத்துக்கொண்டு, பிறரை மட்டும் அவர்பாற் காணப்படும் உயர்ந்தசெயல்களால் உலகவர் புகழவைத்து, அவர் தாழ்ந்த செயல்களை வெளிப்படுத்தாமல் மறக்கக்கடவன் என்பது.

(க-து.) பிறரைப்பற்றிக் கோளுரைக்காமல் அவர் செய்த நன்மையையே உரைத்தால்நன்மதிப்பு வரும்.          (20)____________________________________________

*   தேவாரம், திருநாவுக்கரசு நாயனார், 6.237 - 1.