(பொ-ள்.) பிறர்க்குப் பயன்படத் தாம்கற்ற விற்பார் - உரியரல்லாத பிறர்க்குப் பயனாகும்படி தாம் வருந்திக்கற்றகல்வியறிவுகளைப் பணத்துக்காகக் கொடுக்கும் புலவர்கள், தமக்குப் பயன் வேறு உடையார் -தங்களுக்கு வேறொரு பயனை உடையராவார்கள்; (அது), திறப்படூஉம் தீவினை அஞ்சா விறல் கொண்டுதென்புலத்தார் கோவினை - பலவகைப்பட்ட தீய செயல்களையும் செய்தற்கு அஞ்சாத ஆற்றல்படைத்த தென்புலத்தார்க்குத் தலைவனான கூற்றுவனை, வேலை கொளல் - தங்களை நரகத்திலிட்டுஒறுக்கும்படி வேலை வாங்குதலாம், (அஃதாவது, அப்புலவர் நரகத்துக்குச் சென்று வருந்துவர் என்பது.) (வி-ம்.) நல்லறிவு,நல்லொழுக்கம் முதலியவற்றிற்குப் புறம்பானவர்களைக் குறித்திடுவார் பிறர்க்கென்றார்.கற்ற: வினையாலணையும் பெயர். விற்பார் என்றார். அங்ஙனம் செய்தவன் இழிவு நோக்கி, இதுநல்ல தன்மையில் இல்லாத செல்வர்களை அவர்களிடம் பொருள் பெறுவதற்காகப் பாட்டுப்பாடும்புலவர்கள் போன்றோரைக் குறித்தது. தம்மைப் படைத்துப் புலவராக்கி எப்போதும்புறம்புறந்திரிந்து பாதுகாக்கும் எல்லாம் வல்ல கடவுளைத் தாம் வருந்திக் கற்றதன் பயனாகவாயாரப் பாடாமல். அருகே அணுகுதற்குந் தகுதியற்ற பொல்லாச் செல்வந்தரைப் பரிந்து பாடுதல்ஒரு தீவினை; அதுவுமன்றி. அவரை அளவுக்கு மேற் புகழ்ந்து பாடுதலோடு ஒப்பும் உயர்வும் அற்றஇறைவனோடு அவ்வொப்பும் உயர்வும் பொருந்த உரைத்துப் பணம் பறித்தல் மற்றுமொரு தீவினை.ஆதலின் நமனால் ஒறுக்கப்படுவாரென்க. *”கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன், நற்றாள்தொழாஅ ரெனின்” என்பர் திருவள்ளுவர். அல்லது இதனைத் தகுதியில்லாத மாணாக்கர்க்கு அவர்கொடுக்கும் பணமொன்றே கருதித் தாங் கற்ற அறிவு நூல்களை அறிவுறுத்துவார்க்குங்கொள்வதுண்டு.கொண்ட என்பதுகொண்டு எனத் திரிந்தது. தென்புலத்தார்-இறந்த உயிர்கள். இவைதெற்கிடத்தில் இருக்கின்றன என்னும் வழக்குப் பற்றித் ‘தென்புலத்தா’ ரென்றார். இதனைநாயனாரும் கூறுவார்,+ (க-து.) பொருட்பற்றில்லாதுதகுதியுள்ளாரை நாடிக் கல்வியைப் பரவச்செய்தல் வேண்டும்.(22) ______________________________ * திருக்குறள், கடவுள் வாழ்த்து, 2. + திருக்குறள், இல்வாழ்க்கை, 3 |