24. கல்விசேர் இயல்பினர்

போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி
மீக்கொள் நகையினார் வாய்ச்சேரா - தாக்கணங்கும்
ஆணவாம் பெண்மை யுடத்தெனினும் பெண்ணலம்
பேடு கொளப்படுவ தில்

(பொ-ள்.) தாக்கு அணங்கும்- தாக்கிவருத்துகின்ற, ஆணவாம் பெண்மை -ஆண்மக்கள் அவாவக்கூடிய பெண்மைத்தன்மை, உடைத்து எனினும் - உடையது என்றாலும், பெண் நலம் - அப் பெண்ணின் இன்பம், பேடுகொளப்படுவது இல்-பேடுகளாற் கொள்ளப்படுவதில்லை. (அதுபோல), போக்குஅறு கல்வி- குற்றமற்றகல்வி, புலம் மிக்கவர்பால் அன்றி-அறிவு மிக்கவரிடத்தில் அல்லாமல, மீக்கொள்நகையினார்வாய் - விளையாட்டுத் தன்மையே மிகுதியும் மேற்கொண்டிருப்பவர்களிடத்தில், சேரா- சேர மாட்டாவாம்.

(வி-ம்.) போக்கு- ஒழியத்தக்கது. அது குற்றம். புலம்- அறிவு . ஆராய்ந்து குற்றத்தை நீக்குவார் புலமிக்காராதலினால்மிக்கார்க்குப் போக்கறு கல்வி கூறினார். நகையினார் என்றனர் விளையாட்டுத்தன்மையுடையவரை. ஆன்றஅறிவும் அருளும் உடைய பெரியோரெல்லாரும் மிக ஆழ்ந்து ஆராய்ந்து காட்டியகல்விப்பொருளை அவரைப்போலவே மிக அமைந்த நோக்கமும் ஆழ்ந்த கருத்தும்உடையராய் யாண்டும்நெஞ்சம் செல்லுதலின்றிப் பெருந்தன்மை பொருந்திக் கற்பாராதலினால் அப்பெருந்தன்மை வாயாதுவிளையாட்டிற் பொழுதுகழிக்கும் வீணர்களிடம் அக்கல்விப் பொருள்கள் சேரா என்றார்.தாக்கும் அணங்கும் பெண்மை என்று சேர்த்து வினைத்தொகையாகக்கொண்டு தாக்கி வருத்துகின்றபெண்மைத்தன்மை என்று உரை கூறுக. ஆண் அவாம் என்பதை அப்பெண்மைக்குக் கூட்டிவினைத்தொகையாக்குக. பெண்ணலம் ஆணவாம் தாக்கணங்கும் பெண்மையுடைத்தெனிலும், அது -பேடுகொளப்படுவ தில் என்று வினை முடிவு செய்க. பேடு- இங்கு ஆண் தன்மை இழந்தது. ஆண் தன்மையையிழந்த ஆண்பால் பெண்பாலாகக் கொள்ளப்படும். ‘ஆண்மைவிட்டல்ல தவாவுவ பெண்பால்’* என்பதுநன்னூல். ஆதலால், பெண்பாலெனக் கொள்ளப்படுவது பெண்ணின்பத்தை நுகர ஏலாதது காண்க.“பெண்மக்களின் இயற்கையழகு ஆண்மக்களின் அறிவு ஆற்றல் முதலியவைகளைத் தாக்கி அவர்நெஞ்சத்தைத் தன் கீழ்ப்படுத்தி வருத்தலால் வருத்துவதோ ரணங்கு”* என்று பொருளுரைப்பர்ஆசிரியர் பரிமேலழகர். அணங்குதல்- வருத்துதல் இஃதிப்பொருட்டாதல் “பெண் அணங்குபூந்தார்”+என்ற விடத்துங் காண்க.

(க-து.) விளையாட்டுத்தன்மையுடையவர்க்குப்படிப்பு வாராது. (24)
___________________________________

*   பெயரியல், 7.

+   திருக்குறள், தகையணங்குறுத்தல், 2 உரை.

+   சிந்தாமணி, முத்தி, 17

    நீ.வி.-3