25. கற்றவர் கல்லாதவர் இயல்பறிதல்

கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉங்
குற்றந் தமதே பிறிதன்று - முற்றுணர்ந்தும்
தாமவர் தன்மை யுணராதார் தம்முணரா
ஏதிலரை நோவ தெவன்

(பொ-ள்.) தாம் கற்றன (படித்தவர்கள்) தாம் படித்த நூற் பொருள்களை, கல்லார் செவிமாட்டி - படிக்காதமூடர்களுடைய காதில் நுழைப்பதனால், கையுறூஉம் - தமக்குப் பொருந்தும், குற்றம் - அவமானக்குற்றம், தமதே - தம்முடையதே, பிறிது அன்று - வேறொருவருடையது அன்று; முற்றும்உணர்ந்தும்-எல்லாந் தெரிந்திருந்தும், அவர் தன்மை உணராதார் அம் மூடர்களுடைய மூடத்தன்மையைஉணராதவர்கள், தம் உணரா ஏதிலரை - தம்மைக் கற்றவர்களென்று உணர்ந்து கொள்ளாத அம்மூடர்களை, நோவது எவன்-நொந்து கொள்வது ஏன்?

(வி-ம்.) ‘தாம் அவர்’என்பதில் உள்ள தாம் என்பதை எடுத்துத் ‘தாம் கற்றன’ என்று இணைத்துக் கொள்க. செவிமாட்டி-செவிமாட்டுதலால்; மாட்டி என்பதன் சொல்லாற்றல் தம்முடைய அறிவு நூற்பொருளை அம்மூடர்கள்விரும்பாராகவும் அவர்கள் விரும்பவில்லை என்பதைத் தாமுந் தெரிந்திருந்தும்வேண்டுமென்றேவலிந்து அறிவுறுத்தலை விளக்கிற்று. அங்ஙனம் அறிவுறுத்தலினால் அவமானமே அகப்படும் என்பார்.‘கையுறூஉங் குற்றம்’ என்றார். கையுறல்-அகப்படல்; ‘காணிற் குடிப்பழியாங் கையுறிற்கால்குறையும்” என்பது நாலடியார். அளபெடை இன்னிசை நிறைக்க வந்தது. தமது: குறிப்புமுற்று.ஏகாரம்: தேற்றம். பிறிதன்று - வேறன்று; அக்குற்றம் அம்மூடர்களுடையது அன்று என்னும்பொருளில் வந்தது. நன்றாய்ப் படித்து எல்லாம் தெரிந்திருந்துங் கூடத், ‘தம் அறிவுரைகளைஅம்மூடர்கள் ஏற்றுக் கொள்வார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்று அறிந்துகொள்ளாமற் போனால், அம்மூடர்கள் எவ்வாறு, ‘இவர்கள் படித்தவர்கள்: ஆதலால் இவர்களுக்குமதிப்புக் கொடுத்து இவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்வார்கள் என்பது இதன் உட்கோள். ஏதிலர் - தம்மோடு தொடர்புறுதற்கு ஏதோர் ஏதுவும்இல்லாதவர். அவர் பிறர், `நொ’ நீண்டு நோவதென்றாயிற்று.

(க-து.) ஏற்றுக்கொள்ளுந்தகுதியுடையவர்களுக்கே தாம் அறிந்த அறிவுநூற் பொருள்களைக் கூறுதல் வேண்டும். (25)