(பொ-ள்.) மாத்தகைய அந்தப் புரத்தது பூஞை-பெருமையையுடைய வீட்டினுள் இருப்பது பூனை, புறங்கடையதுகந்து கொல் பூட்கைக் களிறு - அப்பெருமையில்லாத தலைவாயிலில் இருப்பது கட்டுத் தறியைமுறித்து விடக்கூடிய வலிமையுடைய யானை; (என்றாலும் வீட்டினுள் இருப்பதனால் பூனைக்கும்,வெளியில் இருப்பதனால் யானைக்கும் யாதொரு பெருமை சிறுமையும் இல்லை): ஆகவே, மிகல் மக்கள்வேத்து அவை காவார்-மேன்மக்கள், அரசனுடைய அவையில் இருந்தாற்றான் பெருமை வருமென்றுநினைத்து, அந்த அரசவையைக் காத்துக்கொண்டிருக்கமாட்டார்: (அதனால் அவர்க்குவருத்தமென்பதும் ஒன்றில்லை: வேறு சிலர் காத்தது கொண்டு ஆங்கு உவப்பு எய்தார்-அம்மேன்மக்களுக்கு வேறான வேறு சிலர், அஃதாவது கீழ்மக்கள், அவ்வரசவையைக்காத்துக்கொண்டிருந்ததனால் ஏதும் மகிழ்ந்து விடவுமாட்டார். (வி-ம்.) வேந்து அவை எனப்படுவது எதுகைநோக்கி வலித்து வேத்தவை எனப்பட்டது.காவார், காத்தது என்பன அரசனிடத்தில் அலுவல்பெறாதிருத்தலையும் பெற்றிருத்தலையும் குறித்தன. அலுவலைக் காவார் காத்து என்னுஞ்சொற்களாற் கூறினார்; அவ்வலுவல் அரசனிடத்ததேயானாலும் காத்துக் கிடப்பதாகியஇழிவையுடைத்தேயாம் என்றற்கு, மாத்தகைய அந்தப்புரம் என்றார். பிறரெல்லாம்கிட்டுதற்கு அரிதான பெருந்தன்மையுடைய வீட்டின்உள் அறை என்க. அஃது எல்லாரும் கிட்டுதற்கு அருமையான அரசவைக்கு உவமையாக வந்தது.பூட்கை-வலிமை. இஃது இப்பொருட்டாதல் ”ஓடாப்பூட்கை” என்றவிடத்துக் காண்க. (க-து.) அறிஞர்கள் எங்கிருந்தாலும்அவர்கட்கு மதிப்புண்டு. (26) ________________________________ * நாலடி, பிறர்மனை நயவாமை, 4 |