(பொ-ள்.) குலமகட்குக் கொழுநனே தெய்வம் - நல்லொழுக்கமுடைய பெண்ணுக்கு அவள் கணவனே தெய்வமாவான்,புதல்வர்க்குத் தந்தையும் தாயும்- புதல்வர்களுக்கு அவர்கள் தாய் தந்தையர்களே தெய்வமாவார்கள். அறவோர்க்கு அடிகளேதெய்வம் - நல்லொழுக்கமுடைய மாணவர்களுக்கு அவர்கள் ஆசிரியன்மாரே தெய்வமாவார்,அனைவோர்க்கும் இலை முகப்பைம்பூண் இறை தெய்வம் - இவரொழிய மற்றெல்லோருக்கும் இலை நுனிபோன்ற பசும்பொன் நகைகளணிந்த அரசனே தெய்வமாவான். (வி-ம்.) கற்புடைய மனைவி இங்குக் குலமகளெனப் பட்டாள். தெய்வம் என்றது, தெய்வம் போலப்பார்க்கத்தக்கவர்கள் என்பதற்கு, தெய்வம் என்பதை இரண்டாம் அடியினுங் கொள்க, கொழுநனேஎன்பதில் உள்ள பிரிநிலை ஏகாரத்தை மற்றவற்றிற்குங் கூட்டுக. அறவோர் என்றார், மாணவர்கள் மற்றவற்றிற் பற்று வையாதுகல்வியிலே கருத்தூன்றித் துறவிகள் போல் நிற்றலின். அடிகள் ஆசிரியர்க்கு வருதலை “அன்னைதன்னைத் தாதையை அடிகள் தன்னை” * என்னுங் கந்தபுராணத் திருமொழியிற் காண்க. குலமகள்,புதல்வர், அறவோர் என்பவர்கட்குஇன்னின்னார் தெய்வமென்று கூறிவிட்டமையின், அவரொழித்து மற்றையோரையே அனைவோர்க்கும்என்றார். அவ்வனைவோரென்பார் இல்வாழ்வாரென்க. இலைமுகப் பைம்பூண் என்பதை வெற்றிலை மூக்குப்போலச் செய்யப்பட்ட நகை என்றுகூறுப. பைம்பொற்பூண் என்று வரற்பாலது பைம்பூண்என்று வந்தது. இஃது ஒரு மரபு வழுவமைதி யென்பர். கணவன், தாய், தந்தையர், ஆசிரியர், அரசன் என்பார், இறைவன் உயிர்கட்குஎவ்வகையான உதவி செய்கின்றானோ அது போன்ற உதவியையே உடனிருந்து அன்போடு அவ்வப்போதும்தன் மனைவி மாணவர் குடிமக்கள் என்பார்க்குச் செய்தலின், அவரெல்லாம் அவர்கட்குத் தெய்மாவா ரெனப்பட்டார். மன்ற -உறுதியாக எனப் பொருளுரைத்து எல்லாவற்றோடுங் கூட்டிக்கொள்க, (க-து.) மனைவி கணவனையும், மக்கள் பெற்றோரையும், மாணவர் ஆசிரியரையும், குடிமக்கள் அரசனையும் தெய்வமெனப் போற்றக் கடவர். (27) __________________________________ * கந்த, வீர.60:21 |