28. குடியோம்பல்

கண்ணிற் சொலிச்செவியின் நோக்கும் இறைமாட்சி
புண்ணியத்தின் பாலதே யாயினுந் - தண்ணளியான்
மன்பதை ஓம்பாதார்க் கென்னாம் வயப்படைமற்
றென்பயக்கும் ஆணல் லவர்க்கு

(பொ-ள்.) கண்ணின் சொலிச் செவியின் நோக்கும் இறைமாட்சி - கட்பார்வையால் கருத்து அறிவித்துநேரிற் பார்ப்பது போலக் காதினால் செய்திகளை அறியும் அரசனுடைய பெருமையான செய்கை,புண்ணியத்தின் பாலதே ஆயினும் - நல்வினையோடு சேர்ந்ததே ஆனாலும், தண் அளியால்   மன்பதை ஓம்பாதார்க்கு - குளிர்ந்த அருள்நெஞ்சத்தாற் குடிமக்களை ஆளாத அரசர்க்கு, என்னாகும் - கண்ணிற் சொல்லிச் செவியில்நோக்கும் அரசாட்சி முறை என்ன பயனாம்?, ஆணல்லவர்க்கு வயப்படை  என் பயக்கும்- பேடிகளுக்கு வெற்றி தரத்தக்க வில்,வாள், வேல் முதலிய போர்க் கருவிகள் என்ன பயனைத் தரும்?

(வி-ம்.) தன்கீழ் வேலை செய்வோர்க்கும் குடி மக்களுக்கும் ஏனையோர்க்கும் காரியங்களை வாயாற்சொல்லாமல் அக்கருத்தை அவர்கள் தம் பார்வையினாலேயே அறிந்துகொண்டு செயற்படுமாறுபார்த்தலைக் ‘கண்ணிற் சொலி’ என்றார்: வாயின் வேலையைக் கண் செய்தலால், கண்ணுக்குச்சொல்லுந் தொழிலை ஏற்றினார். நேரிற்போய் ஒரு செய்தியை அறிந்தது போலவே தக்கஒற்றர்கள் வாயிலாக அதைக் கேட்டு அறிந்து கொள்ளுதலால், `செவியின் நோக்கி’ என்றார்.இவ்வகையான திறமை எல்லாராலும் இயல்வதன்றாதலால் அதனை `மாட்சி’ என்று கூறினார். அரசாட்சிசெய்ய வேண்டுவோர் இவ்வாறு செய்ய வேண்டுமாதலால், இங்ஙனம் செய்யும் ஆட்சித்திறமையில்லாதவர்கள் அரசராய்ப் பிறந்து விடுவதனால் மட்டும் ஏதும் பயனில்லை யென்பதாம்.அது போர் செய்யும் ஆற்றலில்லாதவன் கையில் வாளிருந்தும் பயனில்லையாதல்போல என்றார்.“பேடிகை ஒள்வாள்” என்று நாயனார் இவ்வுவமையைக் கொண்டிருத்தல் காண்க, ஆணல்லவர்க்கு: ஒருசொன்னீர்மைத்தாய் ஆண்மைத் தன்மையில்லாத பேடிகளை உணர்த்திற்று.

(க-து.) ஆளுந்திறனும் அன்பும் இல்லாத அரசாட்சி பயனின்று.  (28)