3. கல்வியின் இன்பம்

தொடங்கும்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடுங்காமம்
முன் பயக்கும் சில நீர இன்பத்தின் முற்றிழாய்
பின் பயக்கும் பீழை பெரிது

(பொ-ள்.) முற்றிழாய்-முடிந்த தொழில்களையுடைய நகைகளையணிந்த பெண்ணே!, கல்வி-படிப்பு, தொடங்குங்கால்துன்பம் ஆய் இன்பம் பயக்கும்-படிப்பதற்குத் தொடங்குங்காலத்தில் துன்பம் தருவதாகிப் பின்புஇன்பங்கொடுக்கும்; மடம் கொன்று அறிவு அகற்றும்-(அதுவல்லாமலும்) அறியாமையை நீக்கிஅறிவைப் பெருகச் செய்யும்; (ஆனால்), நெடுகாமம்-மிகுதியான காம ஆசையோ வென்றால்,முன்பயக்கும் சில நீர இன்பத்தின் - தொடக்கத்தில் தரக்கூடிய சிறுபொழுது இருக்குந்தன்மையவான இன்பத்தைப் பார்க்கினும், பின் பயக்கும் பீழை பெரிது - அவ்வின்பநுகர்ச்சியின் பின் உண்டாகும் துன்பம் மிகுதியாகும்.

(வி-ம்.) காமத்தினால்இன்பம் நுகர்ந்துவரும் மக்களுள் கற்ற லென்பது துன்பமாயிருக்கின்றதே என்று எண்ணுநர்க்குவிடைமொழியாகும் இச்செய்யுள், மடம் - அறியாமை; அது மீண்டும் உண்டாகாதவாறு கல்விகெடுத்துவிடும் என்பார், `கொன்று' என்றார். கற்பக் கழிபடமஃகும் என்ற நான்மணிக்கடிகைச்செய்யுளும் இக்கருத்துடையது. மடம் நீங்கவே அதனுள் மறைந்து கிடந்த அறிவு எழுந்தது, அங்ஙனம்எழுவித்தலேயன்றிக் கல்வி அதனைப் பெரிதாகவும் விரியச் செய்யும் என்பார். `அகற்றும்'என்றார். நெடுங்காமம் - நெடுமை காமம்: நெடுமை - இங்கு மிகுதிப் பொருளது.

(க-து.) காம வின்பத்தினுங்கல்வியின்பமே சிறந்த தென்பது.    (3)