(பொ-ள்.) இன்று கொளற்பால நாளைகொளப்பொறான் - இன்று கொள்ளத்தக்க பொருள்களை நாளைக்கு வாங்கிக்கொள்ள ஒருநாள்பொறுக்கமாட்டான்; நின்று குறை இரப்ப நேர் படான்-சற்று நேரம் எதிரே நின்று குடிகள் தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டிக்கொள்ளஅகப்படமாட்டான்; ஒருவன் சென்று ஆவன கூறின் எயிறு அலைப்பான்-ஒருவன் எதிரே போய்த் தனக்கு வேண்டியவற்றைக் கூறினால் பல்லைக் கடித்துஅச்சுறுத்துவான்; ஆறு அலைக்கும் வேடு அலன் வேந்தும் அலன் - இப்படிப்பட்டவன் வேடனும் அல்லன் அரசனும் அல்லன். (வி-ம்.) இன்று கொளற்பால - இன்றுகொள்ளும் பான்மையை யுடையவை. நின்று குறையிரப்ப - பொறுமையாய்க் குறையிரத்தல் என்றுமாம்.நாளைக் கொளப் பொறானாயினும் அங்ஙனம் ஒருநாள் பொறுக்குமாறு குடிமக்கள் தமக்குள்ள குறைகளைச்சொல்லிக் கொள்ளலாமென்றாலும் அதற்கும் நேர்படான். ஏதோ நல்ல காலமாக நேர்பட்டானாயினும் அவர்கள் தமக்கு ஆவன கூறும்பொழுது அதனை ஏற்றுக்கொள்ளாமல் எயிறலைப்பான்; இவன்எதற்கும் பயனில்லை என்றிவ்வாறு பொருட்டொடர்பு செய்க. குறையிரப்ப: ஒரு சொன்னீரது, இரைப்பாரைப்போல நின்றுதங்குறை கூறதலுணர்த்திற்று. இதனை இரண்டாகப் பிரித்து இடர்ப்படுவாருமுளர் இங்ஙனமேஎயிறலைத்தல் ஆறலைத்தல் என்பன பண்டுதொட்டே பற்கடித்தல் வழிப்பறித்தல் என்னும் பொருள்மேலாகவே வருதலின், ஒரு சொன்னீர்மைய வென்று கொள்க. நேர்படல் - ஒத்து நிற்றல், இங்குக்குறையிரத்தல் வேண்டுமென்று ஒத்து நிற்றலை உணர்த்திற்று. அரசு அமைச்சுப்போல வேடு வேந்துபண்பாகு பெயர்கள். காட்டில் நின்று பறியாமையாலும் வேடனல்லன் என்றும், குடிகளிடத்தில்தண்ணளியில்லாமையாலும் முறையாகப் பாதுகாவாமையாலும் வேந்தனல்லன் என்றுங் கூறினார். (க-து.) அரசன் குடிகளின் நலத்திற்கருத்துடையனாதல் வேண்டும். (30) |