31. அரசபோக மயக்கம்

முடிப்ப முடித்துப்பின் பூசுவபூசி
உடுப்ப உடுத்துண்ப உண்ணா - இடித்திடித்துக்
கட்டுரை கூறின் செவிக்கொளா கண்விழியா
நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம்

(பொ-ள்.) முடிப்ப முடித்து - முடிக்கத்தக்க மலர் முதலியவற்றை முடித்துக்கொண்டு, பின் பூசுவ பூசி-அதன்பின்பு பூசத்தக்க கலவை முதலியவைகளைப் பூசிக்கொண்டு, உடுப்ப உடுத்து - உடுக்கத்தக்க பட்டாடைமுதலியவற்றை உடுத்துக்கொண்டு, உண்பஉண்ணா-உண்ணத்தக்க நறுநெய்யுணாக்களை  உண்டு (உயிர்த்தன்மை காட்டி). இடித்து இடித்துக்கட்டுரை கூறின் - பலமுறை நெருக்கி நெருக்கி அறிவுரை கூறினாலும், செவிகொள்ளா கண்விழியா-காது கொள்ளாதனவாய்க் கண் திறந்துபாராதனவாய்ப்  பிணத்தன்மை காட்டி நிற்கும்அரசர்கள், நெட்டுயிர்ப்போடு உற்றபிணம் - பெருமூச்சோடு கூடிய பிணங்களேயாவார்கள்.

(வி-ம்.) முடிப்பதும் பூசுவதும் உடுப்பதும் உண்பதுமான செயல்களெல்லாம் உயிரிருப்பதுபோற் காட்டுகின்றன.ஆனால் கேளாமையும் பாராமையும் உயிரில்லாததுபோற் காட்டுகின்றன. உயிருக்கு முதன்மையானதன்மைஅறிவே ஆதலின், அதன் செய்கைகளான கேட்பதும் பார்ப்பதும் இல்லாத  அரசர்களைப் `பிணம்’ என்றே கூறல் வேண்டினார்.ஆனால் அவ்விறந்த பிணத்தினின்றுஞ் சிறிது வேற்றுமை காட்டுதற் பொருட்டு நெட்டுயிர்ப்போடுற்ற பிணமென்றாரென்க. முடிப்ப, பூசுவ, உடுப்ப, உண்ப, செவிகொளா, கண்விழியா:வினையாலணையும் பெயர்கள். கடைசி இரண்டினை முற்றாகக் கொள்ளலுமாம். உண்ணா நின்று என்பதுகடை குறைந்து உண்ணா என்று நின்றது. இடித்திடித்துக் கூறல் - வெட்கம் வருமாறு நெருக்கிக்கூறல்,*”மிகுதிக்கண் மேற்சென்றிடித்தல்” என்பது திருக்குறள். கட்டுரை - பொருள் பொதிந்தசொல்; உறுதியுடைய சொல்லுமாம் என்பது அடியார்க்குநல்லாருரை. கூறின் என்றவிடத்து இழிவுசிறப்பும்மை தொக்கு நின்றது.

(க-து.) அறிவும்இரக்கமும் இல்லாதவர்கள் பிணங்களுக்கு ஒப்பாவார்கள். (31)
_______________________________

*   குறள், நட்பு, 4.சிலப். பதிகம், 54 இன் உரை.