33. அரசன் பேரறிவு

ஏதிலார் யாதும் புகல இறைமகன்
கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு - நேர்நின்று
காக்கை வெளிதென்பார் என்சொலார் தாய்க்கொலை
சால்புடைத் தென்பாரு முண்டு

(பொ-ள்.) காக்கை நேர் நின்று - காக்கையின் எதிரிலேயே நின்றுகொண்டு, வெளிது என்பார் - அக் காக்கை வெண்மையானது என்று உண்மைக்கு மாறாகப் பேசுபவர், என் சொலார் - வேறு எதைத்தான் சொல்லமாட்டார்கள், தாய்க்கொலை சால்புடைத்து என்பாரும் உண்டு - தாயைக் கொலை செய்தல்கூடப் பொருத்தமானதே என்று சொல்பவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள்; ஆதலால், ஏதிலார் யாதும் புகல - பிறர் தமக்குத் தோன்றியவாறெல்லாம் சொன்னாலும், இறை மகன் கோது ஒரீஇக் கொள்கை முதுக்குறைவு - அரசனாவான் அவர்கள் கூறுவதிற் குற்றமானவற்றையெல்லாம் நீக்கிவிட்டு நல்லனவற்றை மட்டுங்கொள்ளுதல் பேரறிவாகும்.

(வி-ம்.) குடிமக்கள் வழக்கிட்டுக் கொண்டு ஒருவர்மேலொருவர் அழுக்காறு முதலியவற்றாற் பொருந்தாதனவுங் கூறுவராதலால்; அரசனாவான் அவர் கூற்றுக்களை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அவற்றிற் பொருந்துவனவே எடுத்துக் கொள்ளுமாறு கூறிற்று: முதுக்குறைவு: ஒரு சொன்னீர்மைத் தாய்ப் பெரிய அறிவினை உணர்த்திற்று. "முதுக்குறைவி"* என்பதற்கு அடியார்க்கு நல்லார் `பெரிய அறிவுடையாள்' என்றது காண்க.

(க-து.) எதனையும் ஆராய்ந்து பார்த்துப் பொருந்துவன கொள்வது அரசன் கடமை. (33)

________________________________

*     சிலப், கொலைக்கள.98