34. மூடர் கேடறியாமை

கண்கூடப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட்
குண்டோ உணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரி
தான்வாய் மடுப்பினும் மாசுணம் கண்டுயில்வ
பேரா பெருமூச் செறிந்து

(பொ-ள்.) மண்டுஎரி - மிகுந்த நெருப்பு, வாய் மடுப்பினும் சூழ்ந்து எரிந்தாலும், மாசுணம் - பெரியபாம்புகள், பெருமூச்செறிந்த - பெருமூச்சு விட்டுக்கொண்டு: கண் துயில்வ-தூங்கிக்கொண்டிருக்கும்; பேரா - அவ்விடத்தினின்றும் அசையா; (அதுபோல) கேடு கண்கூடாப்பட்டதுஎனினும்-தமக்கு வருங்கெடுதிகளை நேராகவே பார்த்தார்களானாலும், கீழ்மக்கட்கு உண்டோஉணர்ச்சி- கீழ்மக்களுக்கு அவற்றினின்றுந் தப்பிப்பிழைக்கும் உணர்ச்சி உண்டோ;இல்லாகும்-இல்லையாகும்.

(வி-ம்.)கண்கூடு: ஒரு சொன்னீரதாய்க் கண்ணுக்குக் கூடுவதான கட்பார்வையை யுணர்த்திற்று.கண்கூடாகப்பட்டது - நேரே கண்ணாற் பார்க்கப்பட்டது. மற்று, தான்: அசை, மண்டெரி பெருந்தீஎன்பது நளவெண்பா. வாய்மடுத்தல்-உண்ணுதல்-மூச்செறிதல்: ஒரு சொல் தன்மைத்து.

(க-து.) எத்துணைக் கெடுதி வருவதாயினும் கீழ்மக்கள் மீண்டும்மீண்டுந் தீயசெயல்களையே செய்வர்.    (34)