35. கேட்டின் குறி

நட்புப் பிரித்தல் பகைநட்டல் ஒற்றிகழ்தல்
பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் - தக்கார்
நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல்
கெடுவது காட்டுங் குறி

(பொ-ள்.) நட்புப்பிரித்தல்- நண்பர்களைப் பகையாக்கிக் கொள்ளலும், பகை நட்டல் - பகைவர்களைநட்பாக்கிக் கொள்ளலும், ஒற்று இகழ்தல்-வேவுகாரர்களை இழித்துரைத்தலும், பக்கத்தார்யாரையும் ஐயுறுதல் - பக்கத்திலுள்ள எல்லாரிடத்தினும் ஐயுறவு கொள்ளலும், தக்கார் நெடுமொழிகோறல் - பெரியோர்களுடைய அறிவுரைகளை மீறலும், குணம் பிறிது ஆதல் - இயல்பான தன்மைக்குமாறாதலும் (ஆக இந்த ஆறு பொருந்தாத செயல்களும்), கெடுவது காட்டும் குறி-பின்னால் வரும்கெடுதிகளைக் காட்டும் அடையாளங்களாம்.

(வி-ம்.) நட்பு,பகை என்பன பண்பாகு பெயர்களாய் அவை தம்முடையாரை உணர்த்தின; ஒற்று: தொழிலாகு பெயராய்எல்லாரிடத்தும் ஒன்றியிருப்பாரை உணர்த்திற்று. நெடுமொழி -பெருமையுடைய மொழி; அஃதுஅறிவுரை, நட்புப் பிரித்தல் முதலிய ஆறையும் உடையார்க்குக் கேடு வரும் என்க.

(க-து.) நட்புப்பிரித்தல் முதலியன செய்யலாகாது. (35)