38. செல்வரின் ஈகைப்பயன்

வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண்
டூரும் எறும்பிங் கொருகோடி யுய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று

(பொ-ள்.)   வாங்கும் - தான் எடுத்து உட்கொள்ளும், கவளத்து -ஒருவாய் உணவினின்று, ஒரு சிறிது - ஒரு சிறிது உணவு, வாய் தப்பின் - வாய் தவறிக் கீழேவிழுந்தால், (அதனால்) தூங்கும் - அசையா நிற்கும், களிறோ - யானைகளோ, துயர்உறா -வருத்தமடையா, அதுகொண்டு - தவறிய அவ்வுணவைக்கொண்டு, இங்கு - இவ்வுலகில், ஊரும் எறும்பு ஒருகோடி -ஊருகின்ற எறும்புகள் ஒரு கோடி, ஆரும் கிளையோடு - தங்கள் நிறைந்த சுற்றத்தோடு,அயின்று - உண்டு, உய்யும் - பிழைக்கும்.

(வி-ம்.) யானைவாயினின்றுந்தவறிய சிற்றுணவால் ஒரு கோடி எறும்புகள் உயிர்வாழும் என்பதனால்,ஒட்டணி கூறப்பட்டது. களிறு,பொதுமையில் நின்றது. ஆல்: அசை. அயின்று - இறந்தகால   வினையெச்சம். `அயில்' பகுதி லகரமெய் னகர மெய்யாகத் திரிந்தது சந்தி.ற்: இடைநிலை;உ:விகுதி. கிளை- கிளைத்தல்: முதனிலைத்தொழிலாகுபெயர். "சுற்றத்தாற்சுற்றப்படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்"* என்பது திருக்குறள். கவளம்-ஒருவாய் உணவு. வாங்கும் கவளம் என்றவிடத்து, பாகன் கொடுக்க யானை வாங்கிஉண்ணும் ஒரு வாயுணவு எனலுமாம்.

(க-து.) பெருஞ்செல்வமுடையவர் அதனில் ஒரு சிறு பகுதியைத் தானமாக வழங்குவராயின் அதனால் எத்தனையோஉயிர்கள் பிழைக்கும்.      (38)
________________________________

*  திருக்குறள் சுற்றந்தழால், 4.

   நீ வி - 4