(பொ-ள்.) கல்வியே கற்பு உடைப்பெண்டிர் ஆ-கற்கின்றவர்க்குத் தாம் கற்ற கல்வியே கற்புடையமனைவியராகவும், அப்பெண்டிர்க்கு தீங்கவியே செல்வப் புதல்வன் ஆ-அம் மனைவியர்க்கு இனியபாடலே அருமையான புதல்வனாகவும், சொல் வளம் மல்லல் வெறுக்கை ஆ-அப்பாடலின் மொழிவளப்பமே நிறைந்தசெல்வமாகவும் இருக்க, மாண் அவை மண்ணுறுத்தும் செல்வமும் சிலர்க்கு உண்டு - மாட்சிமைப்பட்டஅறிஞர் அவையினை அழகுபடுத்தும் செல்வாக்கும் சிலரிடத்தில் உள்ளதாம். (வி-ம்.) இச்செய்யுளால், கல்வியோடு கூடிய ஒருவன் வாழ்க்கை, சிறந்த மனைவியோடு கூடி இல்லறம் நிகழ்த்தும் ஒருவனதுவாழ்க்கையை ஒக்கும் என்பது பெறப்படும், பெண்டிர், புதல்வன், செல்வம் என்பன ஒன்றுக்கொன்றுதொடர்புற்று நிற்றல் கண்டுகொள்க. "மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம்நன்மக்கட்பேறு" * என்னுந் திருக்குறளிற்போலக் கல்வி மற்றானொருவன் எவையேனும் இனியகருத்துடைய நூல்களை இயற்றியிடுதல் வேண்டும்; மகப்பெறாப் பெண்டிரோடு கூடுதலிற்பயனில்லையாதல்போல - நூல் களியற்றாக் கல்விப் புலமையும், பயனில்லையாம் என்றபடி `ஈர்ங்கவியாம்' எனவும் பாடமுண்டு. செல்வத்தாற் குழந்தைகளின் உடல் வளமும் உள்ள வளமும்சிறத்தலின் அத்தீங்கவிக்குச் சொல்வளமாகிய மல்லல்வெறுக்கை வேண்டுமென்றார்."மாணவை மண்ணுறுத்தல்" என்பது பிறர்க்கு அறிவுறுத்தலை உணர்த்திற்று.செல்வமுடையாரினும் சிலர்க்கே ஒப்புரவுச் செல்வம் இருப்பதுபோலக் கற்றாரினும் சிலர்க்கேஅவையை அணிசெய்யும் ஆற்றலுள்ளது. இச்செயல் அரிதாதல் பற்றிச் சிலர்க்கு என்றதுடன்செல்வமும் என்று சிறப்பும்மையுங் கொடுத்தார் ஈண்டுச் செல்வமும் என்பதுசெல்வாக்கையுணர்த்தும். இனிச், சொல்வளம் என்பதற்கே சொல்வன்மை என்று பொருள்கூறுவாருமுளர், தீங்கவியா: கடைக் குறை. ஆக என்பதைப்பெண்டிர்க்குங் கொள்க. இருக்க என்றொருசொல் வருவிக்க. மண்ணுறுத்தல் - கழுவுதல். இஃது எதிரிருக்கும் அவையினரை அவர் அறியாமையாகியமாசைத் தன் விரிவுரை நீரால் கழுவி அணிசெய்தலைக் குறித்து நின்றது. இச்செய்யுள் இயைபுஉருவகம். (க-து.) பிறர்க்கு நூலியற்றற்கும் அறிவுறுத்தற்கும் ஆற்றல் பெறாமலும், பெற்றும் அவை செய்யமாட்டாமலும் இருப்பின் கல்வியாற் பயனில்லையென்பது. (4) _________________________________ * திருக்குறள், வாழ்க்கைத்துணை நலம்-10. |