(பொ-ள்.) கலன் அழிந்த - மங்கல நாண் இழந்த, கற்புடைப்பெண்டிரும்- கற்புடைய பெண்களும், ஐந்து புலன் ஒருங்க - (மெய், வாய், கண்,மூக்கு,செவியென்னும்) ஐம்புலன்களுந் தம் வசப்பட, பொய் ஒழிந்தாரும் - பொய்ம்மையினின்றுநீங்கினோரும், கொலைஞாட்பின் - யுத்தகளத்தின்கண்ணே, மொய்ம்பு உடை வீரரும் - வலிமையுடைய வீரர்களும், முரண், மறலி- வலிமைமிக்க நமன், தும்பை முடிசூடினும் - தும்பைப்பூ மாலையைத் தம் முடியின் அணிந்து எதிர்ப்பினும், அஞ்சார் - (தமது ) நிலைகலங்கார். (வி-ம்.) ஒருங்கு: பகுதி உகரக்கேடு சந்தி, அ: விகுதி. தும்பை மாலை - போர் செய்தற்கு அணியும் மாலை.தும்பை என்னும் முதற்பொருள் அதன் சினையாகிய மலர்க்கு ஆனமையால் பொருளாகு பெயராகவும்,பின்பு அம்மலரால் ஆன மாலைக்கானமையாற் கருவியாகு பெயராகவும் வருதலின், `தும்பை' இருமடியாகுபெயர். மறலி-மறத்தொழில் (கொடுந்தொழில்: அஃதாவது கொல்லுதல்) செய்வதால் மறலிஎனப்பட்டான். கணவரை இழந்து கற்புநிலை தவறாத பெண்கள் இயல்பாகவே தம் வாழ்நாளில் வெறுப்புற்றிருப்பர்;அன்னார் தம் கணவர் இருக்குங்கால் தாம் வாழ்க்கையில் இன்பமாய்க் காலங்கழித்ததும்அன்னார் இறந்தபின் தம் உலக வாழ்க்கை தமக்கு எப்போதும் மகிழ்ச்சியற்றிருப்பதுங் கண்டுஇறப்புக்கு ஆயத்தமாயிருப்பர். ஐம்புலன் வென்ற துறவிகட்கு உலகப்பற்றே யிராதாதலின், அவர்களும் இறப்பை வெறார். வீரர் வீரருலகுவிரும்பிப் போரில் தம் பகைவருடன் எதிர்த்து நிற்குங்கால் தம் உயிரைத் துரும்பாகமதித்துத் தமக்கு அல்லது எதிரிக்கு வெற்றிகாணு மளவும் வீரமுடன் சண்டை செய்வர். தாம்தோற்க நேர்ந்துழி மானங்காப்பான் தம் இன்னுயிரை அக்கொலைக் களத்திலேயே கூற்றுவனிடம்ஒப்படைப்பர். "கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கும், ஆற்ற லதுவே படை"என்பது திருக்குறள். (க-து.) கற்புடைய கைம்பெண்களும், ஐம்புலன் வென்ற துறவிகளும், அஞ்சா நெஞ்சு படைத்த போர் வீரர்களும் இறத்தற்கும் அஞ்சாது தம்மானத்தினைக் காப்பர். (42) |