(பொ-ள்.) விழலர்- (அறிவில்லா) வீணர், புழு நெளிந்து - புழுக்கள் நெளிய, புண் அழுகி - புண்ணாயழுகி, யோசனைநாறும் - யோசனை தூரத்துக்கு நாறுகின்ற, கழி-மிகுந்த, முடைநாற்றத்த ஏனும்-தீநாற்றத்தையுடையவராயினும், விளிவு உன்னி-சாதலை நினைந்து, வெய்து உயிர்ப்பர் -பெருமூச்செறிவர்; (ஆனால்), மெய்ப்பயன் கொண்டார் - தாம் உடம்பெடுத்த பயனை முயன்றுஅடைந்த அறிஞர், சுமை போடுதற்கு - (இவ்வுடம்பாகிய) சுமையை வீசி எறிய, சுளியார் -வெறுப்புக் கொள்ளார். (வி-ம்.) சுமைசுமப்போன், சுமை தாங்காது அதைக் கொண்டுபோய் இறக்குமிடம் வருமட்டும் வருந்தி நடந்துஅவ்விடங் கண்டவுடன் மகிழ்ச்சியால் தன் தலைமீதிருக்குஞ் சுமையை இறக்கி மனமகிழ்தல்போல், உடம்பெடுத்த பயனறிந்த அறிஞர் அவ்வுடம்பாகிய சுமையைச் சுமந்து திரிய வருத்தமடைந்து அச்சுமையைப் போடுங் காலங் கண்டால்மகிழ்ச்சிகொள்வாராகையால் `சுமைபோடுதற்குச் சுளியார்' என்றார்: "மற்றுந்தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க, லுற்றார்க் குடம்பு மிகை " என்பது திருக்குறள். (க-து.) தாம்உடலெடுத்த பயனையடைந்த அறிஞர் இறத்தற்கு அஞ்சார். (43) |