44. மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி

இகழின் இகழ்ந்தாங் கிறைமகன் ஒன்று
புகழினும் ஒக்கப் புகழ்ப - இகல்மன்னன்
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செயும்
நீர்வழிப் பட்ட புணை

(பொ-ள்.)   நீர்வழிப்பட்ட புணை - நீர் செல்லும் வழியே செல்லும்தெப்பம், (அதுபோல்) மன்பதை - மக்கட்கூட்டம், இகல்மன்னன்  - வலிமையுடைய அரசனது, சீர் வழிப்பட்டது - ஆணை ஒழுங்கின் வழியே செல்லும்,மற்று என்செய்யும் - அவ்வழியிற் செல்லாது வேறு என்ன செய்யும்? (அஃதெவ்வாறெனில்),இறைமகன் - அரசன், ஒன்று இகழின் - ஒரு பொருளை இகழ்ந்தால், ஒக்க இகழ்ந்து - (தாமும்அரசனோடு ) கூட அதை இகழ்ந்து, புகழினும் - அவன் (அப் பொருளை) புகழ்ந்தால், ஒக்க  புகழ்ப - தாமும்கூட ஒத்துப் புகழ்வர்.

(வி-ம்) ஒன்று:எண்ணாகு பெயர். அரசனுறங்கினுஞ் சென்று உலகங் காக்கும் அவன் கடவுள் தன்மை, இங்குச் சீர்எனப்பட்டது. "உறங்கும்போதுந் தன்னரு ளாணையுலகெங்கும், அறங்குன் றாவாக் காப்பதைசுயன்ப' என வருவதுங் காண்க. ஒக்க: தனி வினைப்பெயர்; கு: சாரியை; அ: பெயரெச்ச  விகுதி; சுகரம் இரட்டித்தது சந்தி. ஒக்க - ஒத்துநிற்க.

(க-து.) அரசன்ஆணைவழியே குடிகள் ஒழுகுவர்.   (44)