49. இறுவரைகாறும் முயலல்

உறுதி பயப்பக் கடைபோகா வேனும்
இறுவரை காறும் முயல்ப - இறும் உயிர்க்கும்
ஆயுள் மருந்தொழுக்கல் தீதன்றால் அல்லனபோல்
ஆவனவும் உண்டு சில

(பொ-ள்.) இறும் உயிர்க்கும் -இறக்கும் நிலைமையில் இருக்கும் உயிர்களுக்கும், ஆயுள் மருந்து-வாழ்நாளைப் பெருகச் செய்யும்மருந்துகளை, ஒழுக்கல் - வாயில் விடுதல், தீதன்று-தீதாகாது, சில-சில காரியங்கள், அல்லனபோல் ஆவனவும் உண்டு-முடியாதவைபோல் தோன்றி (விடாமுயற்சியின் பயனாய்ப்) பின்பு முடிவனவும்உண்டு; (ஆதலால்) உறுதி பயப்ப - நன்மை பயங்குங் காரியங்கள், கடைபோகா ஏனும் - முற்றுப்பெறாவிடினும், இறுவரை காறும் - (அவை முடிவுபெறும் வரைக்கும், முயல்ப - (அறிஞர்) முயற்சிசெய்துவருவர்.

(வி-ம்.) உறுதி-அடையப்படுவது. பயப்ப:பலவின்பால் வினையாலணையும் பெயர்: இறுவரை:வினைத்தொகை. முயல்ப: பலர்பால் எதிர்காலவினைமுற்று, ப: விகுதி. காறு-வரை: சொல், ஒழுக்கல்: தொழிற்பெயர். ஆல்:அசை. ஆவனவும் -உம்மை இனி ஆகாமையும் என நிற்றலின் எதிர் மறையுமாம். "கலங்காது கண்டவினைக்கட்டுளங்காது, தூக்கங் கடிந்து செயல்" என்னுந் திருக்குறளும், "இசையாதெனினும் இயற்றியோர் ஆற்றால், அசையாது நிற்பதாம் ஆண்மை" என்னும் நாலடியாரும்இங்கே நினைவுகூரற்பாலன. உழைப்பில்லார்க்கு ஊதியமில்லை யாகையால் எக்கருமமாயினும் இறுதிவரைசலிப்பின்றி முயலல் வேண்டும்.

(க-து.) எக்கருமமாயினும்பயனளிக்காதென்று இடையில் விட்டுவிடாமல் அயர்வின்றி முடிவுவரை முயல வேண்டும்.       (49)