(பொ-ள்.) கல்விஎத்துணைய ஆயினும் - கற்ற கல்வி எவ்வளவு பெரியனவானாலும், இடம் அறிந்து - நூலின்இடந்தெரிந்து, உய்த்து உணர்வு இல் எனின் - ஆராய்ந்து உணரும் உணர்ச்சி இல்லையானால்,இல்லாகும்- அக் கல்வி பயனில்லையாகும், உய்த்துணர்ந்தும்-அங்ஙனம் உய்த்துணர்ந்தாலும், சொல்வன்மைஇன்று எனின் என் ஆம் - பிறர்க்கு எடுத்துச் சொல்லும் வல்லமை இல்லையென்றால் அக் கல்வியால் என்ன பயனாகும்?, அஃதுண்டேல் - அச்சொல்வன்மை இருக்குமானால், பொன்மலர் நாற்றம் உடைத்து - அது பொன்னாற்செய்யப்பட்ட மலர் மணம் உடையது போலாகும். (வி-ம்.) உய்த்துணர்வுஎன்பதற்கு நல்லாசிரியனைத் தெரிந்து ஆராய்ந்து அறிதலென்று பொருளுரைத்து அதற்கேற்ப எத்துணையஎன்பதற்குச் சிறுமைப் பொருளுரைப்பாருமுளர். இல்லாகும், என்னாம் என்பன படித்தும் பயனில்லைஎன்பதைக் காட்டின; உவமை சிறப்பின்கண் வந்தது. அதற்கு உவமஉருபு உரைத்துக்கொள்க. அஃது:இல்பொருளுவமை. கல்விக்கும், அதனைக் கற்பானுக்கும்; கற்றதை எடுத்துரைப்பானுக்கும் உள்ளஇயைபினை உவமை செவ்விதின் விளக்குகின்றது. `எத்துணைய தாயினும்' என்பதும் பாடம். (க-து.) இடமறிந்து உய்த்துணர்தலும் சொல்வன்மையும் இல்லையானாற்கல்வியாற் பயனில்லை. (5) |