50. முயற்சி செய்யாமை

முயலாது வைத்து முயற்றின்மை யாலே
உயலாகா ஊழ்த்திறந்த என்னார் - மயலாயும்
ஊற்றமில் தூவிளக்கம் ஊழுண்மை காண்டுமென்று
ஏற்றார் எறிகால் முகத்து

(பொ-ள்.) ஊற்றம் இல்-அசைவின்றி நிற்குந் தன்மையில்லாத, தூ விளக்கம்-தூயவிளக்கை,ஊழ் உண்மை காண்டும் என்று - ஊழ்வினையின் உண்மையைத் தெரிவோம் என்றுகருதி, எறி-வீசுகின்ற, கால்முகத்து - காற்றுக்கெதிரில்,மயலாயும் - அறிவுகெட்டும், ஏற்றார்- (ஒருவரும்) ஏற்றமாட்டார் : (அதுபோலஅறிவுடையார்) முயலாது வைத்து -பயன்தரும் காரியங்களைச் செய்யத்தாம் முயற்சி செய்யாமலேயிருந்து, ஊழ்திறந்த - ஊழ்வினை வகையில் வரும் நன்மைகள், முயற்று இன்மையாலே - தாம் முயற்சி செய்யாமையால், உயல் ஆகா - தப்பமாட்டா:என்னார் - என்று கருதிக்கொண்டுவாளா இரார்.

(வி-ம்.) முயற்சியால்ஊழையும் வெல்லலாமென  இதற்கடுத்த செய்யுளில் ஆசிரியர் கூறுவர்.  ஊற்றம் - நிலையுடையதாய் நிற்குந்தன்மை."ஊற்ற மிறு விளக்கம்" என்ற பாடங்கொண்டு, அசைவின்றி நிற்றலை ஒழிந்த விளக்கினை என் றுரைப்பாருமுளர், முகத்து: ஏழாம் வேற்றுமைக்கண்நின்றது.

(க-து.) எல்லாம் ஊழ்வினைப்படி ஆகும் என்று கருதி அறிஞர் வாளாவிருந்து முயற்சி செய்யாதிரார்.           (50)