(பொ-ள்.) கருமமே கண்ணாயினார்- (தாம் தொடங்கிய) காரியத்தை முடிப்பதிலேயே கருத்துக்கொண்டவர், மெய் வருத்தம் பாரார் - (தம்) உடம்பின் வருத்தத்தைக் கவனியார், பசி நோக்கார் - பசியையும் கவனியார், கண் துஞ்சார் - உறங்கார்,எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - யார் தீங்கு செய்தாலும் அதைப்பொருட்படுத்தார், செவ்வி-காலத்தின்; அருமையும் பாரார் - அருமையையும் நோக்கார்,அவமதிப்புங் கொள்ளார் - (பிறர் செய்யும்)அவமதிப்பையும் கருதார். (வி-ம்.) கண் துஞ்சார்; உயர்திணையொடு சார்ந்த அ ஃறிணைப் பெயர் உயர்திணை முடிபேற்று ஒரு சொன்னீர்மைத்தாய் நின்றது. எவ்வெவர் - எவர்; பன்மைப் பொருள்களில் வந்த அடுக்குத் தொடர்,ஏ: பிரிநிலை. துருவன், இருண்ட காட்டில் வெயில், பனி, மழை முதலியவற்றால்உடலுக்கு ஏற்பட்ட மெய்வருத்தம் பாராமலும், பசி நோக்காமலும், கண் துஞ்சாமலும், கொடிய காட்டு விலங்குகளின்தீமையை மேற்கொள்ளாமலும்தன்கருமமே கண்ணாகித்திருமாலினிடம் பதவி பெற்ற வரலாறு இதற்குச் சான்றாகும். (க-து.) ஒரு தொழிலைச் செய்து முடிக்க முன்னிற்போர்தமக்கு வரும் எவ்வகை இடையூறுகளையும் பொருட்படுத்தார். (53) |