(பொ-ள்.) புண்-புண்ணை, கருவியிட்டுஆற்றுவார்-கருவியினால் அறுத்து அதனைக் குணப்படுத்துவார்கள்; (அவ்வாறின்றி) பொதிந்து மூடார் - அதனை மறைத்துமூடிவையார்; (அதுபோல்)புறம்நட்டு - வெளிக்கு உறவுகாட்டி. அகம்வேர்ப்பார் - உள்ளே கோபிப்பவரது, நச்சுப்பகைமை-நஞ்சுபோலுங் கொடியபகைமையை, வெளியிட்டு - வெளியாக்கி, வேறு ஆதல்வேண்டும் - நீங்கல்வேண்டும்; கழிபெருங்கண்ணோட்டம்- (அத்தகைய வஞ்சகமான பகைவர்பால்) மிகுந்த அன்பு, செய்யார் - செய்யமாட்டார். (வி-ம்.) கருவியினால் அறுத்துக் குணப்படுத்த வேண்டிய புண்ணை மூடிவைத்தால், அஃது உள்ளே புடைத்துக் கெடுதி விளைத்தல் போல; உட்பகையும் வெளியுறவும் உடையவரால் தப்பாமற் கேடுவருமாதலின், அன்னாரின் நச்சுப் பகைமையை `வெளியிட்டு வேறாதல் வேண்டும்' என்றார். "முகத்தி னினிய நகாஅவகத்தின்னா, வஞ்சகரை யஞ்சப்படும்"என்பது திருக்குறள்.கழிபெரும்: ஒருபொருட்பன்மொழி:அகம்வேர்ப்பார்: ஒரு சொன்னீர்மைத்தாய் உயர் திணையின் முடிபேற்றது. செய்யேல்: முன்னிலைஒருமை ஏவல்எதிர்மறை வினைமுற்று.நஞ்சு-நச்சு; வலித்தது. கண்ணோட்டமாவது தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியனமறுக்க மாட்டாமை. அஃதாவது, அவர்கள் சென்ற வழியே செல்வது. (க-து.) வெளிக்கு உறவுகாட்டி உட்பகைமை கொண்டாரிடம் பழைமை காட்டல்தகாது. (56) |