57. தீ நட்பு

நட்பிடைக் குய்யம்வைத்து எய்யா வினைசூழ்ந்து
வட்கார் திறத்தராய் நின்றாக்குத் - திட்பமாம்
நாளுலந்த தன்றே நடுவன் நடுவின்மை
வாளா கிடப்பன் மறந்து

(பொ-ள்.) நட்பு  இடை - நண்பரிடத்து, குய்யம் வைத்து  - வஞ்சகம் செய்தலைக் கொண்டு, எய்யா - அவர் அறியாமல்,வினை சூழ்ந்து - (அவர்க்குத்) தீங்கு செய்யக் காலம் பார்த்து,வட்கார் திறத்தராய் - (அவர்கட்கு உள்ள) பகைவரோடு  சேர்ந்து கொண்டு, நின்றார்க்கு - நிற்பவர்க்கு.  திட்பம் ஆம்-வலிய, நாள் - ஆயுட்காலம், உலந்தது அன்று - முடிந்ததில்லை, நடுவன் - இயமன், நடுவின்மை - (அத்தகைய வஞ்சகரின்) நடுவு நிலைமையில்லாத தீச் செயல்களை, மறந்து - தான் நடுவு நிலைமையுடையவனாகையால் நினையாமல், வாளாகிடப்பன் - சும்மாஇருப்பன்.

(வி-ம்.) இயமன் நடுநிலையுடையோனாதலால் நடுவன்எனக்கூறினார்; தன்னிலைபோற் கருதிப் பிறரையும் எண்ணுவனாகையால் `நடுவின்மை  வாளா கிடப்பன் மறந்து' என்று கூறினார்.

(க-து.) நண்பர்போல்நடித்து வஞ்சகம் செய்வார் இயமன் நினைவிற்குஅகப்படுமட்டும் உயிரோடிருப்பர்.    (57)