(பொ-ள்.) குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் - (ஒருவன்) தன்குலத்தை விற்றுத்தேடும்பொருளும், வாய்மை நலம் விற்றுக் கொள்ளும்திருவும் - உண்மை எனும்நற்பொருளை விற்று (அஃதாவது, பொய் புகன்று) பெறும் செல்வமும், தவம்விற்று ஊன் ஓம்பும் வாழ்வும் - (தான் கொண்ட) விரதத்தை விற்றுத் தன் உடலைப்பாதுகாக்கும் வாழ்க்கையும், உரிமைவிற்று உண்பதூஉம்-தன் முன்னோர் வாக்களித்த உரிமைகளை விற்று உண்ணுதலும் (ஆகிய இவை யாவும் தன்னை வந்தடையாமல்), தான் ஓம்பிக் காத்தல் - தான் விழிப்புடன் காத்துக்கொள்வது, தலை-(எல்லா வறங்களுள்ளும்) தலைமையான அறமாகும். (வி-ம்) குலம் விற்றல் - பொருள்வேண்டிக் குலத்திற்குரிய ஒழுக்கம் பெருமை முதலியவற்றை விட்டு வேறோர் இழிகுலப் பற்றுடைத்தாதல். வாய்மை நலம்விற்றல்-பொருள் வேண்டிய பொய்ப்புகலல். பொய்ச்சான்று கூறுதல், தவம் விற்றல்-பொருள் வேண்டிக் கூடாவொழுக்கம், தீமை, களவு முதலிய நற்றவத்திற் கேலாதன செய்தல், உரிமை விற்றல் - பொருள் வேண்டிப் பிறனுக் கடிமையாதல்,வெறுக்கை - பொருளுடையார்க்கு எப்போதும்உயிரச்சமேயாதலால் அறிஞர் அதனை வெறுப்பர்எனுங் காரணம் பற்றிப் பொருளுக்கு வெறுக்கை என்பது பெயராயிற்று. ஊன் : காரியமாகிய உடம்பிற்காதலால்- ஆகுபெயர்.தலை : பண்பாகு பெயர். ஆங்கு : அசை. (க-து.) மிகுந்த பொருள் கிடைக்குமென்றெண்ணி ஒருவன் தன்குலம் வாய்மை தவம் உரிமைஆகியவற்றைக் கைவிடல் தகாது. (62) |