64. பெற்றதைவிட்டுப் பெறாததை விரும்பல்

பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும்
சிற்றுயிர்க்கு ஆக்கம் அரிதம்மா - முற்றும்
வரவர வாய்மடுத்து வல்விராய் மாய
எரிதழன் மாயா திரா

(பொ-ள்.) வரவரவாய்மடுத்து - கிடைக்கக்கிடைக்கத்தன்வாயினுள் அடக்கி, வல்விராய் முற்றும் மாய - வலிய விறகுகள்முழுதும் எரிந்தழிய, எரிதழல்-எரிகின்றதீயும், மாயாதிரா - அழியாது போவதில்லை, (அழிந்தே போகும்; அது போல), பெற்ற - கிடைத்த பொருள், சிறுக - தமக்குச்சிறியவாகத் தோற்ற, பெறாத - கிடைக்காத பொருளை, பெரிதுள்ளும்- மிகுதியாக விரும்பிக்கருதும், சிற்றுயிர்க்கு - குறுகிய வாழ்நாளையுடைய உயிர்களுக்கு,ஆக்கம் அரிது - பொருள் வளர்ச்சியும்அதனாலான பிற நன்மைகளும் உண்டாதல்அரிதாகும்.

(வி-ம்.) 'போதுமென்ற மனமே பொன்செயுமருந்து' எனும் பழமொழி இங்குநோக்கற்பாலது. பெற்ற,பெறாத :இரண்டும் பெயர்கள். அருமை - ஈண்டு இன்மைப்பொருட்டு. விறகு போடப்போடத்தீயும் அவற்றைப்பற்றிக்கொழுந்துவிட்டெரியும் ; மேல், விறகில்லையேல்எரிந்த விறகில் தங்கிய தீ நிலைத்தலின்றிச் சிறிது நேரத்தில் அவிந்து போகும் ; மேலும் மேலும் விறகுக்கு ஆசைப்படும் தீ, விறகு கிடைக்காவிடில்கிடைத்தவிறகை எரிக்குமட்டிலேனும நிலையாமல் உடனேஅவிந்து போதலும் உண்டு, பேராசையுடையோர் இவ்விரு வகை நிலைக்கு உரியர்.அம்மா : வியப்பு.

(க-து.) பெற்ற பொருள்போதுமென மகிழ்ச்சி கொள்ளாது பேராசைகொண்டு பெரும்பொருள் விரும்புவோர், பெற்றபொருளான பயனையும் இழப்பர்.(64)