67. ஈயாதார் செல்வம்

வள்ளன்மை யில்லாதான் செல்வத்தின் மற்றையோன்
நல்குரவே போலும் நனிநல்ல - கொன்னே
அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று
பலரால் இகழப் படான்

(பொ-ள்.) வள்ளன்மைஇல்லாதான்- ஈயும் குணமில்லாதானது,செல்வத்தின்-செல்வத்தைவிட, மற்றையோன்- ஈயுங் குணமுடையவனுடைய, நல்குரவே-வறுமையே, நனிநல்ல-மிகவும் நல்லன ; (ஏனெனில், அவ்வறியன்உயிர்களிடம்) அருள் இலன்(என்று) - கருணையில்லாதவன் என்றாதல், அன்பிலன் (என்று) - அன்பில் லாதவன்என்றாதல், கண்ணறையன் என்று - கண்ணோட்ட மில்லாதவன்என்றாதல், பலரால்-பலராலும, கொன்னே - வீணில், இகழப்படான்- பழிக்கப்படமாட்டான்.

(வி-ம்.) 'ஈயாதசெல்வர் இருந்தென்ன போயென்ன'எனும் இழிவுமொழி இங்கு நோக்கற்பாலது. போலும்: அசை -கண் அறையண்- கண்ணோட்டம் அற்றவன்.கொடையில்லாதவன். இகழப்படுவான் என்பதனாற் கொடையாளி புகழப்படுவான்எனஉய்த்துணர வைப்பது மாறுபடு புகழ்நிலையணி.

(க-து.) ஈயாத செல்வர்உலகினராற்பழிக்கப்படுவர். (67)