69. சொல்வன்மைப் பயன்

சொல்வன்மை உண்டெனிற்கொன்னே விடுத்தொழிதல்
நல்வினை கோறலின்வேறல்ல - வல்லைத்தம்
ஆக்கங்கெடுவ துளதெனினும்அஞ்சுபவோ
வாக்கின்பயன்கொள் பவர்

(பொ-ள்.) சொல்வன்மை உண்டெனின் - தன் சொல்லைக் கேட்கும் ஒருவன்அதன்படி நடப்பான் என்னும் தன்சொல்லின் திறனறிந்திருந்தால், கொன்னே விடுத்து ஒழிதல்- அவ்வாறான சொற்றிறனைப் பயன் படுத்தாது வீணாகக்கைவிட்டுவிடுதல், நல்வினை - நற்காரியங்களுக்கு, கோறலின்வேறல்ல - கேடு செய்தலினும் வேறாகா, வாக்கின் பயன் கொள்பவர் - சொல்வன்மையாற் பெறப்படும் பயனையறிந்தோர், வல்லை - விரைவில், தம் ஆக்கம் கெடுவதுஉளது எனினும்- தமது பொருளெல்லாம்கெட்டொழியுமாயினும்,அஞ்சுபவோ - அதற்காக அஞ்சுவரோ? (அஞ்சார்).

(வி-ம்.) சொல்வன்மையாவது - பிறர்க்குந் தமக்கும் பயன்படும் வகையிலும் பிறர்மதிப்பளிக்கும்நிலையிலும்பேசும்ஆற்றல், தம் சொல்லாற் பயனுண்டென்றுதம்மை நாடித் தம் சொல்லுக்குக் குறையிரக்கும் தம்மின் எளியார்க்குஅன்னார்நலங்கருதித் தம் சொல்வன்மையைப்பயன்படுத்தா தொழியினும் நல்வினை கோறலாய் முடியும். சொல்வன்மையுடைய ஒருவரிடம் ஓர் எளியன் போய், "நீவிர் ஒரு சொல் சொன்னால் பிறர் எனக்கு வேண்டும் உதவிசெய்வர்" எனக்கூறி அவன்குறையிரக்கும்போது சொல்வன்மை யுடையான் அது செய்ய மறுப்பானாகில் அவன் தீவினையுறுதலும் உண்டென்க. "அறம் பெரிதறைதல், வாய்மை, கல்வி, தீமையில்திறம்பல். இன்மொழி இசைத்தல், வன்மொழிமறுத்தல்"* இவை வாக்கின் பயன்.

(க-து.) சொல்வன்மையாற்பெறப்படும் பயனை யறிந்தோர் அப்பயனடைவான்வேண்டிச் சொல்வன்மை யாற்செய்யக்கூடிய நன்மைகளை விரைவிற்செய்து நலம்பெறுவர். (69)