(பொ-ள்.) கலைமகள்வாழ்க்கை முகத்தது எனினும்- கலைமகளினுடைய வாழ்க்கை இருவர்க்கும் தத்தம்முகத்தினிடத்ததேயானாலும், மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வான்-மலர்மேலிருக்கும் நான்முகன்வளப்பம் பொருந்திய தமிழ்ப் புலவர்களுக்குஒப்பாகான், (ஏனென்றால்) மலரவன் செய் வெறு உடம்பு மாய்வன போல் - மலரவன் செய்கின்றபுகழில்லாத ஊன் உடம்பு அழிந்துபோவன போல, மற்று இவர் செய்யும் உடம்பு புகழ் கொண்டு மாயா- மற்று இப்புலவர்கள் செய்கின்ற நூலுடம்புகள் புகழைப்பெற்று அழியமாட்டா (ஆதலின் என்க). (வி-ம்.) கலை- கற்றலாற் பெறப்படுவது, கலைமகள் நான்முகன் நாவிலும் புலவர்கள் நாவிலும் உறைகின்றாளென்பதை `முகத்தது' என்றார்: முகத்தது; குறிப்பு முற்று. வெறுமை இலை - வெற்றிலை என்றாற்போல வெறுமை உடம்பு வெற்றுடம் பாயிற்று. பெருமை இல்லாத வெறும் உடம்பு என்பது பொருள். மண்நீர் முதலிய பூதங்களா னியன்றமையின் வெற்றுடம்பு மாய்வன; புலவர்கள் செய்யும் நூல் பின்னும்பின்னும் புகழப்படுதலின் மாயா என்றார் ; நூலை உடம்பென்று கூறினார்; " பல்வகைத்தாதுவின் உயிர்க்கு உடல்போற் பல சொல்லாற்பொருட்கிடனாக......செய்வது செய்யுள்"* என்பது நன்னூல். ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன்னேயிருந்த தொல்காப்பியனாரும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயிருந்த திருவள்ளுவனாரும்அருளிச்செய்த தொல்காப்பியம், திருக்குறள் என்னும் இலக்கண இலக்கிய நூல்களாகியஉடம்புகளின் வாயிலாக அவர்கள் செய்து கொண்ட புகழ் இன்றும் அழியாமல் நின்றுநிலவுகின்றமையும், ஆனால், மலரவன் செய்த அவரூனுடம்புகள், புகழோடு இக்காலத்திற் காணமுடியாதபடிஅக்காலங்களிலேயே மறைந்து போனமையுங் கண்டுகொள்க, இவ்வுண்மையை நாயனார், "கேடில்விழுச் செல்வம்"+ என்று உளமாரக் கூறுவர். இவ்வெற்றுடம்பும் புகழுடம்பும் மேல் 40ஆவதுசெய்யுளிலும் வருதல் காண்க. பிறிதின்கண் வந்தது. இச்செய்யுள், தொழில் வேற்றுமையணி. (க-து.) கல்வியே என்றும் அழியாதது. ______________________________________ * நன், பெயரியல், 11. + திருக்குறள், கல்வி, 10. |