72. அடக்கம் இல்லாதார்

அல்லன செய்யினும் ஆகுலங் கூழாக்கொண்
டொல்லாதார் வாய்விட் டுலம்புப - வல்லார்
பிறர்பிறர் செய்பபோற் செய்தக்க செய்தாங்
கறிமடம் பூண்டுநிற் பாரஞ்

(பொ-ள்.) ஒல்லாதார்- வன்மையில்லாதவர், அல்லன செய்யினும் - பிறர்க்குப் பயன்படக்கூடிய செயல்கள்) அல்லாதவற்றைச் செய்தாலும், (தாம் பயன்படக்கூடிய செயல்களைச் செய்துவிட்டதுபோல்)ஆகுலம் கூழ் ஆ கொண்டு - ஆரவாரத்தையே  பயனாகக் கொண்டு, வாய்விட்டு உலம்புப - பலரறியத் தஞ்செயல்களைக் கூறி முழங்குவர்; வல்லார் - வல்லமையுடையோர் - பிறர் பிறர் செய்பபோல் செய்தக்க செய்து - தக்கார் பிறராற் செய்யப் படுவனபோலப் பயன்படுஞ்செயல்கள் செய்து, ஆங்கு - அவ்விடத்தில்; அறிமடம் - (தாம் செய்த பயன்படுஞ் செயல்களைத் தாம் நன்குணர்ந்தும் உணராததுபோல்) அறியாமையை, பூண்டு நிற்பார் - மேற்கொண்டு அடக்கமாயிருப்பர்.

(வி-ம்.) மனம், வாக்கு, காயங்களில் அடக்கமிலார் செய்யுங் காரியங்கள் மற்றவர்களுக்குப் பயன்படா வாகையால் 'அல்லன செய்யினும்' என்றார். அடுக்கு, பன்மைக்கண் வந்தது.

(க-து.) அருஞ்செயல்கள் செய்ய இயலாதவரே அடக்க மிலாது ஆரவாரமுடையராயிருப்பர்.                   (72)