(பொ-ள்.) பிறன்வரைநின்றாள் - பிறன் வரம்பில் நிற்பவள் (அஃதாவது பிறன் மனைவி),கடைத் தலைச் சேறல் - தலைவாயிலினிடத்துச் செல்லல், அறன் அன்று - நற்செயலாகாது, ஆயினும் ஆக (அவ்வாறுஅறனாகாது) ஆயினுமாகுக. சிறுவரையும் - (அச்செயலில்) நொடிப்பொழுதாயினும், நல் நலத்தது ஆயின்- தூய இன்பமுடையதாயின், கொள்க - அதனைக் கைக்கொள்க ; நலம் அன்றே - (அச்செயலால் வருவது) இன்பமன்றே ;(ஆனால்வருவதென்னை யெனின்), மெய்நடுங்க - உடல் நடுங்க, உள் நடுங்கும்நோய் - மனமும் நடுங்குவதற்குக் காரணமாகிய வருத்தமேயாகும். (வி-ம்.) பிறன்மனை புகுவான் புகுங்கால் மெய்ந்நடுங்கி உள்ளொடுங்கிச் செல்வானாதலால் "மெய்ந்நடுங்க உண்ணடுங்க நோய்" என்றார்."புக்கவிடத் தச்சம் போதரும்போ தச்சம்,துய்க்குமிடத் தச்சம் தோன்றாமற் காப்பச்சம்,"*"காணிற் குடிப்பழியாம்கையுறிற் கால்குறையும்."+'பகைபாவம் அச்சம் பழியென நான்கும், இகவாவாம் இல்லிறப்பான் கண்" + என்பன இங்குநினைவு கூரற்பாலன. (க-து.) பிறன்மனையாளை விரும்பல் அறனன்று ; இன்பமுமன்று ; துன்பமே விளைவிக்கும். (77) ______________________________________ * நாலடியார்.83,84 திருக்குறள் 15 : 6 |