78. நல்லின்பம்

கருமஞ் சிதையாமே கல்வி கெடாமே
தருமமுந் தாழ்வு படாமே - பெரிதுந்தம்
இன்னலமுங் குன்றாமே ஏரிளங் கொம்பன்னார்
நன்னலந் துய்த்தல் நலம்

(பொ-ள்.) கருமம் சிதையாமே - தாம் செய்ய வேண்டியகாரியங்கள் தவறிப்போகாமலும், கல்வி கெடாமே - பின்னுங் கற்றுக் கொள்ளவேண்டிய கல்வி கெட்டுப்போகாமலும்,தருமமும் தாழ்வு படாமே- செய்ய வேண்டிய அறச்செயல்களுக்குக் குறைவு வராமலும், பெரிதும் - மிகுதியாக, தம் இன்நலமுங் குன்றாமே - நம் இல்லற நன்மையுங்குறைவுபடாமலும், எர் இள கொம்பு அன்னார்-அழகிய  இளங்கொம்பினை யொத்த மனைவியரின், நல் நலம் துய்த்தல்- நல்லின்பத்தை நுகர்தல், நலம்- யாவர்க்கும் நன்றாம்.

(வி-ம்.) கருமமாவது, பொருள் முயற்சி முதலியன ; கல்வி - அறிஞர்எழுதிய அறிவுரைகள்கற்றலுங் கற்பித்தலும். தருமம்-தத்தம் நிலைக்குரிய வகையில் ஒழுகல். இல் நலம்- இல்லற வாழ்க்கைக்குரிய அறவோர்க்களித்தலும் அந்தணரோம்பலும்,துறவோர்க் கெதிர்தலும், தொல்லோர்சிறப்பின் விருந்தெதிர் கோடலும் முதலியநற்செய்கைகள்.  முன் செய்யுளில் பிறனில்விழைவதாலேற்படும் துன்பங்களை விளக்கிப் போந்த ஆசிரியர், இச்செய்யுளில் தன் இல்லாளோடு ஒருவன் இன்ப  நுகருங்கால் கவனிக்க வேண்டிய முறைகளை விளக்கினார்.

(க-து.) கடமைகட்குக் குறைவு நேராத முறையில் மனைவியோடுகூடி இன்பம் நுகர்தல் வேண்டும்.            (78)