79. காமிகள் செய்கை

கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமும் ஓம்பார்
களவொன்றோ ஏனையவுஞ் செய்வார் - பழியோடு
பாவமிஃ தென்னார் பிறிதுமற் றென்செய்யார்
காமங் கதுவப்பட் டார்

(பொ-ள்.) காமம் கதுவப்பட்டார் - காமத்தால் பற்றப்பட்டவர்கள், கொலை அஞ்சார் - கொலைபுரியப் பயப்படார்,பொய் நாணார் - பொய் சொல்லக் கூசார்,மானமும் ஓம்பார்- தம் பெருமையையும் பாதுகாவார், களவு ஒன்றோ - களவு செய்தலொன்றோ ! (அதற்கு மேலும்) ஏனையவும் செய்வார், மற்றுமுள்ள பலவகையான தீச்செயல்களும் செய்வார்,  இஃது -  இக்காமம், பழியொடு  பாவம் என்னார்- பழியொடு பாவமாம் என்றும் நினையார், (அங்ஙனமாயின் அவர்) பிறிது என்செய்யார் - வேறு யாதுதான் செய்யமாட்டார்?எல்லாத் தீச்செய்கைகளுஞ்செய்வார். 

(வி-ம்.) 'காமங் கதுவப் பட்டார்' காமம்என்பதற்கு அடிமையாயினார் என்பது பொருள். மற்று  : அசைச்சொல். பொய்ந் நாணார் என்பது தனிக்குறிலையடுத்து நின்ற யகர வீற்றின்முன் நகரம் மிகுந்தது.  'குறில்வழியத்தனி ஐந்தொது முன்மெலி மிகலுமாம்' என்பது விதி, (நன். சூ.158) 

(க-து.) காமச்சிந்தையுடையோர் எல்லாத் தீச்செயல்களுஞ் செய்வர்.  (79)